இன்றைய தமிழக அரசியல் களத்தில் பாமக உள்கட்சி மோதலே முக்கிய விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
பாமக தலைவர் (ராமதாஸ் கூற்றுப்படி செயல் தலைவர்) அன்புமணி, எம்எல்ஏ-க்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம், மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. ஏறத்தாழ 180 நிர்வாகிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் சுமார் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
பெரும்பாலானவர்கள் புறக்கணித்திருந்தது ராமதாஸ்க்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தாலும் தலைமைப் பொறுப்பை அன்புமணிக்கு விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. அதனால் தான் சிங்கத்துக்கு காலில் பழுது ஏற்பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்பார்கள்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லையே, அப்படியென்றால் சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும்
என்று 87 வயதிலும் அவர் ஆவேசப்பட்டு இருக்கிறார்.
ஆனாலும் பாமகவில் அன்புமணியின் கையே ஓங்கி இருப்பது தெளிவாகிறது.
தந்தையும் மகனும் அதிகாரப் போட்டியில் மோதிக்கொள்வதைப் பார்த்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வேதனைப்படுகிறார்கள். வயதாகி விட்டதால் அன்புமணிக்கு விட்டுக் கொடுத்து கட்சியை வளர்க்காமல் பிடிவாதம் செய்வது ராமதாஸ்க்கு அழகல்ல என்று ஒரு சாராரும் தந்தையின் ஆலோசனைப்படி செயல்பட்டு கட்சியை வளர்க்காமல் நிறுவனர் ராமதாசையே ஓரங்கட்டப்பார்க்கும் அன்புமணியின் போக்கு சரியல்ல என்று இன்னொரு சாராரும் கட்சிக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலமாக இருவருக்கும் இடையில் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும் இதெல்லாம் உள்கட்சிப் பிரச்னை என்று கூறி சமாதானமானதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நானா, நீயா? ஒரு கை பார்க்கலாம்
என்ற அளவிற்கு மோதல் உச்சத்திற்குப் போய் விட்டது.
உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் உயிருடனிருக்கும் போதே அகிலேஷ் யாதவ் எப்படி அவரை கட்சியை விட்டு நீக்கி அசிங்கப்படுத்தினாரோ, அதேபோல் தன்னுடைய தந்தையை அசிங்கப்படுத்த நினைக்கிறாரோ அன்புமணி? பரூக் அப்துல்லா செயல்பாட்டுடன் இருக்கும் போதே உமர் அப்துல்லா முதல்வர் பதவிக்கு வந்தது போல ராமதாஸ் செயல்பாட்டில் இருக்கும் போதே கட்சியே தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அன்புமணி?
96 வயதிலும் கலைஞரின் தலைமையையே ஏற்று செயல்பட்டாரே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் வழியைப் பின்பற்றி தந்தையின் அறிவுரைப்படி ராமதாஸோடு இணைந்து அன்புமணி செயல்பட்டால் தான் பாமக ஒன்றாக இருக்கும். இல்லையேல் உடைந்து போகும் என்ற அச்சம் தான் அக்கட்சியினரை ஆட்கொண்டுள்ளது.
இதற்கிடையில் சட்டப்பேரவைத் தேர்தல் வேறு வருகிறது. பாஜக இடம் பெற்றிருக்கும் அதிமுக கூட்டணியில் பாமக சேருவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை விஜய் கட்சியான தவெக கூட்டணியில் சேரலாம். அல்லது தனித்து போட்டியிட வேண்டும். ஆனால், இவற்றில் எது என்பதை முடிவு செய்யப் போவது யார், ராமதாசா? அன்புமணியா? ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இருவரும் இணைந்தா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!