fbpx
Homeதலையங்கம்ராகுல் யாத்திரை கை கொடுக்குமா?

ராகுல் யாத்திரை கை கொடுக்குமா?

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை கடந்த 150 நாட்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி, திமுகவின் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ராகுலின் யாத்திரையின் சிறப்பு, அரசியல் சாராதவர்களும் அதில் பங்கேற்றது தான். இந்த யாத்திரையில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்மிளா மடோன்கர், ஸ்வரா பாஸ்கர், பூஜா பட், ரியா சென் மற்றும் ஆனந்த் பட்வர்தன் ஆகியோர் திரையுலகில் இருந்து இணைந்தனர். இதில் சமூக ஆர்வலர் அருணா ராய் கலந்து கொண்டார். தெலுங்கானாவில் ரோஹித் வெமுலாவின் தாயார் யாத்திரையில் கலந்துகொண்டார்.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இசை பிரமுகர் டிஎம் கிருஷ்ணா, நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா, கணேஷ் தேவி மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன், ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் ஆகியோர் யாத்திரையில் பங்கேற்றனர்.

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி புகார் கூறிவந்த நிலையில் சில இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகளும் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் யாத்திரை தொடங்கி அடுத்த நாள் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுமையான குளிரிலும் ராகுல் காந்தி ஸ்வட்டர் அணியவில்லை. திக் விஜய் சிங்கின் புல்வாமா குறித்த பேச்சு என பல சர்ச்சைகளும் சலசலப்புகளும் இருந்துவந்த நிலையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டபடி ஸ்ரீ நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து யாத்திரை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு தொடர்ந்து இரண்டு முறையும் சுமார் 50 இடங்களே கிடைத்தபோது, நரேந்திர மோடியின் அரசுக்கு கிட்டத்தட்ட எதிர்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்பட்டது.

ஆனால் பாதயாத்திரைக்குப் பிறகு காங்கிரஸின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக ராகுல் காந்தி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு, நன்கு அறியப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக முன்னேறியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இது பாஜக எதிர்பார்க்காத ஒன்று.

காங்கிரஸின் செயல்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அது நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதன் உண்மையான அர்த்தம் ‘எதிர்க்கட்சி இல்லாத இந்தியா’ என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளதையும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டு மக்களிடம் அதிகரித்து வரும் வெறுப்புணர்வை அகற்றிவிட்டு, அன்பை பரப்பும் நோக்கில் பாதயாத்திரை நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்த நிலையில், இது அவர்களுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கை கொடுக்குமா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img