சின்னாளபட்டியில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவருவதால் பூங்காக்களுக்கு மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வரத் தயங்குகின்றனர். எனவே பூங்காக்களுக்கு மின் விளக்குகளுடன் காவலர்களை நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு நகர்கள் உள்ளன. இவற்றில் பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட பல இடங்களை தனியார் ஆக்கிரமித்து உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சின்னாளபட்டி பேரூராட்சியால் உருவாக்கப்பட்ட பூங்காக்களில் ஏ.டி.எஸ். நகர் பூங்கா ஒன்றுதான் முழுமையான பராமரிப்பில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. அதற்கு காரணம் ஏ.டி.எஸ். நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினரால் அந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது 17-வது வார்டு பொன் நகரில் (பழைய 4-வது வார்டு) 15-வது நிதிக்குழு மான்யநிதி மூலம் ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்காவை முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதே பொன்நகரில் பூங்காவிற்கு வடபகுதி சுமார் 200 மீட்டர் தூரத்தில் கருணாநிதி நகர் என்று பெயரிட்டு பொன்நகர் பகுதியிலேயே ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்காவை பேரூராட்சி நிர்வாகத்தினர் திறந்து வைத்தனர். திறந்து வைத்து 2 வருட காலமாகியும் முறையான காவலாளியை நியமிக்கவில்லை, மின் விளக்கு வசதியும் அமைத்துக் கொடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்த பூங்காவில் மட்டும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
கருணாநிதி நகர் பூங்கா என்று பெயரிட்டு பொன் நகரில் திறந்து வைக்கப்பட்ட 2-வது பூங்காவில் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும், காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் மாறி வருகிறது. பகல் நேரங்களில் பூங்காவிற்குள் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி பூங்காவை சேதப்படுத்தி வருகின்றனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மின் விளக்கு வசதி, பூங்கா காவலர் வசதி செய்து கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் பொன்நகர் 2-வது பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சமூக விரோதிகள் பயன்படுத்தும் பூங்காவாக மாறி வருகிறது. மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய தலைவர் வேளாங்கண்ணி கூறுகையில் கருணாநிதி காலனி (நகர்) தென்புறம் உள்ளது. அதற்கு வடக்கே காமாட்சி காலனி (நகர்) உள்ளது.
அதையும் தாண்டி தென் பகுதியில்தான் பொன்நகர் உள்ளது. ஆனால் பொன் நகரில் உள்ள பூங்காவிற்கு கருணாநிதி காலனி என பெயரிட்டது பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் கருணாநிதி காலனிக்கு ஒதுக்கப்பட்ட பூங்காவிற்கான இடம் எங்கு உள்ளது, அங்கு பூங்கா இருக்கிறதா என்றுகூட தெரியவில்லை. இதுபோலத்தான் பல இடங்களில் ஏக்கர் கணக்கிலும், 10 ஆயிரத்திற்கு மேலான சதுரடி கணக்கிலும் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தனியார்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.



