பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தமிழ்நாட்டின் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிச் சென்றுள்ளார்.
தற்போது தமிழகத்தில் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தி திணிப்பு, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தரமறுப்பது, தமிழ் மொழிக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்குவது, பேரிடர் நிவாரண நிதி தராமல் இருப்பது போன்றவற்றை முன்னிறுத்தி ஒன்றிய பாஜக அரசு தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் விரோதமானது என தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கங்கை கொண்ட சோழபுரம் வருகை, சோழர்களைப் போல தமிழரின் பெருமைமிகு வரலாற்றை பாராட்டும் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி அல்ல என மக்களுக்கு உணர்த்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
முன்னர் மராத்திய மன்னர் சிவாஜியை பாஜக தேசிய நாயகனாக மாற்றியது போல, இப்போது சோழ மன்னர்களையும் அப்படியே இந்திய ஒற்றுமையின் அடையாளமாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருப்பது அதன் தொடக்கப் புள்ளி. இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஒன்றிய ஆட்சிக்கு எதிரான உணர்வுகளைத் தணிக்க விரும்புகிறது பாஜக என்பது அனைவருக்கும் தெரிகிறது.
பாஜக 2026 சட்டப்பேரவையையும், எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு தலைமை இடத்தை நோக்கிச் செல்லும் இலக்கையும் வைத்துள்ளது. அதற்காக, திராவிடம் அல்லாத ஒரு தமிழக அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பது அதன் திட்டம்.
அதற்காக சோழர் மரபு, பல்லவர் கட்டிடக்கலை, சங்க இலக்கியம் போன்றவற்றை உச்சப்படுத்தி பேசும் பாணியில் மோடியின் பேச்சும் நகர்வும் அமைந்திருந்தது.
திராவிட இயக்கத்தின் பாரம்பரிய ஆட்சி முறை மற்றும் அதன் வரலாற்று நாயகர்களுக்கு மாற்றாக, தேசிய அடையாளத்தில் தமிழர்களின் பெருமையை நிரூபிக்க பாஜக எடுத்த முடிவின் பிரதிபலிப்பே இந்நிகழ்ச்சி என்பது தான் அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.
தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியானது ஒரு குடையின் கீழ் நடைபெற்ற அரசாங்கம் போன்றது. தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்தும் நடைபெற்ற ஒரு கட்சி ஆட்சி முறையை அது குறிப்பிடுகிறது. பிரதமர் மோடி தற்போது சோழ தேசத்தை குறிவைத்து தமிழ்நாடு தேர்தலில் நுழைந்துள்ளார் என்றே கூறலாம்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக சோழ தேச வாக்குகள், பாஜகவுக்கு கிடைப்பதற்காக அவர் போட்டிருக்கும் திட்டத்தின் முதல் அத்தியாயம் தான் இது என்றும் சொல்லலாம்.
ஆக, கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சி வெறும் கலாச்சார மரபு கொண்டாட்டம் மட்டுமல்ல, நுணுக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தின் தொடக்கம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் பல முக்கிய அரசியல் கணக்குகள் உள்ளன.
தராசின் ஒரு தட்டில் தற்போதைய தமிழ்நாடு அரசின் சாதனைகள், அதற்காக ஒன்றிய அரசும் பத்திகைகளும் தந்த முதலிடப் பாராட்டுப் பத்திரங்களையும் நம்பிக்கையுடன் அடுக்கி நிரப்பி வைத்திருக்கிறார்கள். இன்னொரு தட்டில் பாஜக – அதிமுக கூட்டணி, தவெக, நாதக கட்சிகளின் கொள்கைகள், கடந்த கால செயல்பாடுகள், வாக்குறுதிகளை தனித்தனியே வைத்து எடை போட்டுப் பார்த்தபடி இருக்கிறார்கள்.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே இலக்கை நோக்கித் தான் எல்லா கட்சிகளும் கணக்குப் போட்டு காய் நகர்த்துகின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் போடும் மனக்கணக்கு எப்படி இருக்கும்?
2026 தேர்தலுக்காக தமிழ்நாட்டு வாக்காளர்கள் மனதில் ஒரு கணக்கு உள்ளது. கடினமான அந்தக் கணக்கிற்கு தீர்வு காண இலக்கங்களை போட்டு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் பார்க்கத் தொடங்கி விட்டனர்.
பல கோடி வாக்காளர்களின் ஒற்றை விரல் அழுத்தப்போகும் வாக்குகள் மூலம் தான் அந்தக் கணக்கிற்கு சரியான விடை கிடைக்கும் – காத்திருப்போம்!



