fbpx
Homeதலையங்கம்கேலி செய்த பிரதமரே இலவசம் அறிவிப்பதேன்?

கேலி செய்த பிரதமரே இலவசம் அறிவிப்பதேன்?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாத இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைய இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் – டிசம்பர் 3ம் தேதி வெளியாக இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கர்நாடகத்தைப் போல ஐந்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கே வெற்றி என்று ராகுல்காந்தி கூறுகிறார்.

தேர்தல்கால இலவச அறிவிப்புகளால் நாடே குட்டிச்சுவராகி விட்டது என்று கூறிய பிரதமர் மோடி, இப்போது மற்ற அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை திடீரென அறிவித்து வருகிறார். ஏன்?
தோல்வி பயம் தான்.

இதுவரை கவலைப்படாத சமூகநீதிபற்றி பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற பாஜக தலைவர்கள் உரக்கப் பேசுகிறார்கள். அதாவது, சமூகநீதி, ஒடுக்கப் பட்டோர், பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசி புதிய பாதையில் பாஜக பயணிக்க முயற்சிக்கிறது.

இதெல்லாம் ஓட்டுகளை வேட்டையாட பாஜக கையிலெடுத்துள்ள அஸ்திரமாகத்தான் பார்க்கப்படுகிறது. இது எதைக்காட்டுகிறது?
தோல்வி பயம் தான்.

அதனால் தான், இலவசங்களைக் கேலி செய்தும், சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டும் வந்த பிரதமர் நரேந்திர மோடி, இப்பொழுது இலவசங்களை வாயால் வாரி வழங்குவதும், சமூகநீதிபற்றி உரக்கப் பேசுவதும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று பேசுவதெற்கெல்லாம், தேர்தல் தோல்வி பயமே காரணம் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்கனவே கதவுகள் மூடப்பட்டு விட்டன. வட மாநிலங்களிலும் பாஜகவுக்கு கதவுகள் மூடப்படுமா? காங்கிரசுக்கு கதவுகள் திறக்குமா? என்ற கேள்விக்கு டிசம்பர் 3ம் தேதி விடை கிடைக்கும்.

நல்லாட்சிக்கு கதவுகள் திறக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img