ஏலம் கோவில் வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏலத்தை ஒத்திவைத்தனர்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான பெள்ளாதி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.சுமார் 30கிராம மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில் காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ள நிலையில் இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை கோவில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோவில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்
காரமடை அரங்கநாதர் கோவில்
காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலம் நடத்த முயன்ற போது கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயல்வதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விரைவில் முறையான அறிவிப்பு கொடுத்து ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி, ஆர்.கே.குமார் உள்ளிட்டோரும் காரமடை போலீசாரும் இரு குழுவினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.