fbpx
Homeபிற செய்திகள்476 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 5,854 பேருக்கு ரூ.33.21 கோடி வங்கிக் கடனுதவி

476 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 5,854 பேருக்கு ரூ.33.21 கோடி வங்கிக் கடனுதவி

நீலகிரி மாவட்டத்தில் 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33.21 கோடி மதிப்பில் வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுவானது முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

தற்போது, மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார் முதல்வர். அதனடிப்படையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பணிக்கு செல்லும் மகளிர்க்கு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களின் வாயிலாக, மகளிர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (வாழ்ந்து காட்டுவோம்) ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் திட்டத்தின் மூலம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல் நிதி, வங்கிகடன் இணைப்பு மற்றும் பெருங்கடன், தனிநபர் கடன், தொழில் முனைவோர் கடன், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மகளிர் எந்த தொழில் செய்தால் வருமானத்தை பெருக்க கூடுமோ அந்த தொழில் செய்வதற்காக கடனுதவிகளை வழங்கி, சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி, அரசு சுய உதவிகுழு இயக்கத்தை வலுபடுத்தியும் வருகிறது.

அதனைத் தொடர்ந்து, உதகை அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 29.12.2022 அன்று 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33.21 கோடி மதிப்பில் வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

“தொழில் தொடங்க உதவும்”

பயனடைந்த மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா கூறியதாவது :
கோத்தகிரி வட்டம், நெடுகுளா ஊராட்சி பகுதியில் வசித்து வருகிறேன். நெடுகுளா ஊராட்சி கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன்.

இந்த கூட்டமைப்பின் கீழ் ஹெத்தையம்மன் சுய உதவிக்குழு, சிந்து நதி சுயஉதவிக்குழு, அறிஞர் அண்ணா சுய உதவிக்குழு என 136 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எங்கள் கூட்டமைப்பில் உள்ள 25 குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகையினை பெற்று காளான் வளர்ப்பு, மஞ்சப்பைகளை தயாரித்தல், கிரீன்டீ, வொயிட் டீ, வர்க்கி, பிஸ்கட், மசாலாபொடி தயாரித்தல், அழகு கலை, ஸ்டாபெர்ரி பழம், மகளிர் உணவகம் வைத்தல் போன்ற வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு தொழில் தொடங்க உள்ளோம்.

இதில் வரும் வருமானத்தின் மூலம் வங்கிக் கடன் தொகையினை மாதம் மாதம் தவறாமல் செலுத்துவோம். இது போன்ற மகளிர்களின் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“வருவாய் ஈட்டுவோம்”
பயனடைந்த மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் தீபா கூறியதாவது :
கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட நடுஹட்டி பகுதியில் வசித்து வருகிறேன். நடுஹட்டி ஊராட்சியில் 100 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

கோத்தகிரி கனரா வங்கி மூலம் பெருங்கடனாக ரூ.50 லட்சம் 25 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையினை கொண்டு தைலம் தயாரித்தல், மிளகாய் தூள், கோழி வளர்ப்பு, காபி கொள்முதல், உல்லன் ஆடை தயாரித்தல், டீ தொழில், தேனெடுத்தல், பலகாரம் செய்தல், பழக்கன்று நாற்று தயாரித்தல், மகளிர் உணவகம், நவீன ஆடைகள் தயாரித்தல் போன்ற சிறு தொழில்கள் தொடங்க உள்ளோம்.

இத்தகைய தொழில்களை செய்து நாங்கள் வருவாய் ஈட்டி மாதம் மாதம் வங்கிக் கடன் தொகையினை செலுத்துவோம். இது போன்று மகளிர் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றி வைத்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் தலைமையிலான தமிழக அரசுக்கு மகளிர் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img