மலைகளின் அரசியான ஊட்டிக்கு கோவையில் இருந்து ஊட்டிக்கு உதகை சாலை,கோத்தகிரி சாலை வழியாக தான் செல்ல இயலும்.இதனால் இச்சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
மேலும்,தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருவதால் அதனை ரசிப்பதற்காகவே இளம் தம்பதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் உதகை மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.
அதே வேளையில் யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக மலைப்பாதைகளில் கவனத்துடனும்,மெதுவாக இயக்கும் படியும் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதும்,ஊனமாவதும் அடிக்கடி நிகழ்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு ஊட்டி சாலையில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகள் கடந்த 3 மாதங்களாக கண்காணிக்கப்பட்டன. அதேவேளையில் உயிரிழக்கும் இடங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணித்ததில் ஊட்டி சாலையில் 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மாவட்ட வன அலுவலர்
இந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்க மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஸ்டாலின் மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு பரிந்துரைத்தார் .பின்னர்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனினும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஊட்டி சாலையில் வேகத்தடைகள் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ஊட்டி சாலையில் இரண்டாம் பாலம், ரயில்வே பாதை அருகே என மொத்தமாக 6 இடங்களில் வேகத்தடைகள் அமைத்து வருகின்றனர்.