நீலகிரி மாவட்டம் அவ லாஞ்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்படவுள்ள அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணையினை மாவட்ட கலெக்டர் அம்ரித் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டார்.
மீன்வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்து, மீன் குஞ்சு பொரிப்பக கூடாரத்தினையும் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863ம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச் சியாளரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஹென்றி சார்ல்டன் வில்சன்
1907ம் ஆண்டு ஹென்றி சார்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேய மீன்வள ஆராய்ச்சியாளரால் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் வளர்ப்புப் பண்ணையானது தொடங்கப்பட்டது. இப் பண்ணையானது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2,036 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இப்பண்ணையில் டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல், அம்முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன் குஞ்சுகளை வளர்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஆண்டுக்கு தோராயமாக 60,000 முதல் 70,000 எண்ணிக்கையில் டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழை காரணத் தினால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் சேதமடைந்தது.
இதனை தேசிய வேளாண் அபிவிருத்தி & RKVY திட்டத்தின் கீழ் நீர்வழி பாதை பழுது பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் ஜனவரி 2023ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோக்கர்நக் அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் 6.1.2023 அன்று இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் இணைப்பு பாலம் ரூ.17.22 லட்சம் மதிப்பிலும், செக்டேம் ரூ.32.04 லட்சம் மதிப்பிலும், வடிகால் ரூ.43.03 லட்சம் மதிப்பிலும், தடுப்புச்சுவர் ரூ.34.93 லட்சம் மதிப்பிலும், 5 மீன் வளர்ப்பு குளம் ரூ.18.79 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன்பண்ணையினை நவீன மயமாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, உதவி செயற்பொறியாளர் (மீன்வளத்துறை) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (பவானிசாகர்) கதிரேசன், குந்தா வட்டாட்சியர் இந்திரா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.