Homeபிற செய்திகள்(அக்டோபர் 10: உலக மனநல தினம்)உடலும் உள்ளமும் நலம்தானா?

(அக்டோபர் 10: உலக மனநல தினம்)உடலும் உள்ளமும் நலம்தானா?

சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டும் அல்ல; ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனத்தைப் பெற்றிருப்பவர் தெளிவாகச் சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர் ஆகியோரோடு நல்லுறவு பேணுபவராகவும் ஆத்ம திருப்தி உடையவராகவும் சமூகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவராகவும் விளங்க வேண்டும். மனம் சார்ந்த இந்தத் தன்மைகளையே மனநலம் என்று கூறலாம்.
மனமும் உடலும் தனித்தனியானது என்பது போல் நாம் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும். அவை தங்களுக்குள் நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொள்கின்றன; ஆனால், நம்மைச் சுற்றியுள்ள உலகுக்கு அவை வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன. ஏதோ ஒரு காரணத்தால் இவை இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், அதன் பாதிப்பு மற்றொன்றிலும் பிரதிபலிக்கும். மனமும் உடலும் தனித்தனியானது என்று நாம் கருதுவதால், அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கத் தேவையில்லை என்பது பொருளல்ல.
உடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதைப் போல, மனத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதை மனநோய் என்று அழைக்கலாம். ஒருவரின் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது நடத்தை ஆகியவற்றைப் பாதித்து, அவருடைய பாரம்பரிய நம்பிக்கைகளையும் ஆளுமையையும் தவிர்த்து, அவருடைய வாழ்க்கையிலோ அல்லது அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையிலோ எதிர்மறை பாதிப்பை விளைவிக்கும் விதத்தில் ஒருவர் அனுபவிக்கும் நலமின்மையே மனநோய் ஆகும்.
யாருக்கு மனநல பாதிப்புகள் வரலாம்?

மனநல பாதிப்புகள் வயது, பாலினம், பின்னணி அல்லது தகுதி என்ற பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். உடல்நலக் குறைவு எப்படி எவருக்கும் வரக்கூடுமோ, அதேபோல்தான் மனநலப் பாதிப்புகளும்.
இருப்பினும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் காரணங்களால் சிலருக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
*குடும்பப் பிரச்சினைகள், வேலைப்பளு, நிதி நெருக்கடி அல்லது மிக நெருங்கியவர்களின் இழப்பைச் சந்தித்தவர்கள்.
*குடும்பத்தில் பெற்றோர் அல்லது ரத்த உறவினர்களுக்கு மனநல பாதிப்புகள் இருந்திருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் அது வர வாய்ப்புகள் உண்டு.
*சிறுவயதில் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டவர்கள் மற்றும் வன்முறையைக் கண்டவர்கள்.
*மது, கஞ்சா, புகையிலை அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு உள்ளவர்களுக்கு *மூளையின் வேதிச்சமநிலை மாறி மனநலம் பாதிக்கப்படலாம்.
*சமூகத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதவர்கள்.
உலக அளவில் பிரபலமான மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) மற்றும் அதன் பிரத்யேக உளவியல் இதழான லான்செட் சைக்கியாட்ரி (The Lancet Psychiatry), உலகளாவிய மனநலம் குறித்து வெளியிட்டுள்ள மிக முக்கிய ஆய்வுத் தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதய நோய் மற்றும் புற்றுநோயை முந்தி,உலகளவில் மனிதர்களின் அன்றாட செயல்பாட்டுத் திறனைப் பாதிக்கும் முதன்மைக் காரணியாக மனநலக் கோளாறுகள் மாறியுள்ளன.
உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் (பூமியின் மக்கள் தொகையில் 14%) ஏதேனும் ஒரு வகையான மனநலப் பாதிப்புடன் வாழ்கின்றனர். இது 1990-ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதில் பதற்றக் கோளாறுகள் 158%-மும், மனச்சோர்வு 131%-மும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.
உலகளவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மனநலப் பாதிப்புகளுக்கு அதிகளவில் ஆளாகிறார்கள். சமூக ஊடகங்களின் தாக்கம்,தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, குடும்ப வன்முறை, சிறுவயதில் ஏற்படும் அதிர்ச்சிகரமான அனுபவங்கள், காலநிலை மாற்றம் குறித்த தீவிரக் கவலை, சமூகப் பிணைப்புகள் குறைந்து, மக்களிடையே தனிமை அதிகரிப்பது போன்ற காரணங்களால் மனநல பிரச்னைகள் அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
உடல் நலனில் அக்கறை காட்டுவதைப் போல் மனநலத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனநல பாதிப்பு இருந்தால் தவறாமல் மனநல மருத்துவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தரும் மருந்துகள் தூக்க மாத்திரைகள் அல்ல;நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடுட உதவும் ஊக்க மாத்திரைகள்.
மனநல பாதிப்புகளை பேய், பிசாசு பிடித்திருக்கிறது, பில்லி சூனியம் என்று தவறாக நினைக்க வேண்டாம். மனநல சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-டாக்டர் ஜி.ராஜமோகன்,
ஓய்வுபெற்ற உளவியல் பேராசிரியர்,
சென்னை, மாநிலக் கல்லூரி.
9087007908.

படிக்க வேண்டும்

spot_img