9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறித் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மாவட்ட
ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 1905-ம் ஆண்டு கொல்கத்தா டவுன்ஹாலில் ஆகஸ்ட் 7-ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அன்னிய பொருட்கள் மறுப்பு மற்றும் சுதேசி இயக்கம் குறித்தான பிரகடனம் வெளியிடப்பட்டதனை நினைவுகூறும் விதமாக ஆகஸ்ட் 7-ம் நாளினை தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கப்பட்டு கடந்த 07.08.2015 அன்று சென்னையில் முதல் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் இந்தியா முழுவதும் 9-வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.எனவே தேசிய கைத்தறி தினமான இன்று அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிந்து கைத்தறி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடை இரகங்களை தங்களது நிறுவனங்களில் காட்சிப்படுத்தி அரசு மற்றும் தனியார் துறையினர் பெருமளவில் கொள்முதல் செய்து பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களை பெருமைப்படுத்திடவும், தேசிய கைத்தறி தினத்தை சிறப்பாக கொண்டாடி நெசவாளர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
அதன் பொருட்டு இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோவை சரகத்திலுள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை காட்சிப்படுத்தி 20 சதவீதம் அரசு தள்ளுபடி விற்பனை செய்யப்பட்டது. கைத்தறி தினத்தன்று நாம் அனைவரும் கைத்தறி துணிகளை அணிந்து கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதுடன் கைத்தறி ஆடைகளின் விற்பனையை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.