Homeபிற செய்திகள்கோவையில் தேசிய அளவிலான3 நாள் குதிரையேற்ற லீக் போட்டிகள்

கோவையில் தேசிய அளவிலான3 நாள் குதிரையேற்ற லீக் போட்டிகள்

இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டாவது ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை நடத்த உள்ளனர்.
இப்போட்டியின் இரண்டாவது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி ஜென்னி கிளப்பில் நடைபெற்றது. இதனை ஈக்வெஸ்ட்ரியன் லீக் ஆலோசகரும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்புவிருந்தினராக பங்கேற்று அறிமுகபடுத்தினார்.
ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ்.சக்தி பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை புல்ஸ் அணியைச் சேர்ந்த பாரத் மனோகரன், பெங்களூரு நைட்ஸ் அணியைச் சேர்ந்த திலீப், கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணியைச் சேர்ந்த நவீன், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் அணியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டி, வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி பவர் ஹவுஸ்’ எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஏ.எஸ்.சக்தி பாலாஜி, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், முன்னணி குதிரையேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை ஷோ ஜம்பிங் போட்டியில் வெளிப்படுத்துவதற்கான தொழில்முறை தளத்தை உருவாக்குவதுடன், இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இரண்டாவது சீசனில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை புல்ஸ், கேரளாவைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்போர்ட்ஸ், தெலங்கானாவைச் சேர்ந்த கோல்கொண்டா சார்ஜர்ஸ், கர்நாடகாவைப் பிரதிநிதித் துவப்படுத்தும் பெங்களூரு நைட்ஸ், கோவாவைச் சேர்ந்த குவாண்டம் ரெயின்ஸ் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த அணிகளில் நாட்டின் முன்னணி மற்றும் அனுபவம் வாய்ந்த குதிரையேற்ற வீரர்கள் தங்களது குதிரைகளுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த லீக்கில் பாரத் மனோகரன், சூர்யா, பாலமுருகன், ஸ்ரேஷ்த், பாலாஜி விஜயசங்கர், ஹாஷினி, அவிக் பாட்டியா, நீல் கெண்டல், கிரண், ஹர்சித் மற்றும் ஆராதனா உள்ளிட்ட முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் நடைபெறும் குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110 சென்டிமீட்டர் மற்றும் 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெறும். போட்டியாளர்களின் செயல்பாடுகளை, புது தில்லியைச் சேர்ந்த சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்ய உள்ளனர். மேலும், ஷார்ஜாவைச் சேர்ந்த போட்டிப் பாதை வடிவமைப்பாளர் போட்டிக்கான பாதையை வடிவமைக்க உள்ளார். இந்த லீக்கில் மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர், திரையுலகப் பிரபலங்கள், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினர். குதிரையேற்றம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் பங்கேற்க உள்ளார்.
மோளப்பாளையத்தில் உள்ள தி பவர் ஹவுஸ் அருகே அமைக்கப்படும் போட்டி நடைபெறும் இடத்தில் சுமார் 6,000 பேர் அமரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர், பாதுகாப்பு மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், தனது முதல் சீசனை 2025 ஜூலை மாதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. நாட்டின் சிறந்த குதிரையேற்ற வீரர்களை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு போட்டி நிறைந்த ஷோ ஜம்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த லீக் உருவாக்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டி, குதிரையேற்ற விளையாட்டு ஆர்வலர்கள், விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு விறுவிறுப்பான விளையாட்டு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குதிரையேற்ற விளையாட்டை பொதுமக்களிடம் மேலும் ஊக்குவிக்கும் வகையில், போட்டியை காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் மற்றும் குதிரைகள் பங்கேற்க உள்ள நிலையில், ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டாவது சீசன் கோவை விளையாட்டு ஆர்வலர்களிடையே முக்கிய ஈர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் ஷோ ஜம்பிங் மற்றும் குதிரையேற்ற விளையாட்டின் வளர்ந்து வரும் வரவேற்பு மற்றும் வாய்ப்புகளை வெளிப்படுத்தும் முக்கிய தளமாகவும் இந்தப் போட்டி அமைய உள்ளது.
டிக்கெட்டுகளை ஜிவீநீளீமீtஜீக்ஷீவீஜ்.நீஷீனீ இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: 89258 04911 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img