பாரம்பரிய நீர் மேலாண்மை மீட்டெடுக்கும் வகையில் கோவையின் பழமையான சோமையம்பாளையம் ஏரி புனரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. நீர்வரத்து மற்றும் நீரோட்டப் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில், புத்துயிர் பெற்றது சோமயம்பாளையம் ஏரி.
நீர் மேலாண்மையில் நீண்ட பாரம்பரியம் உள்ள கோவையில், கொங்கு சோழர் காலத்தில் நொய்யல் ஆற்றைச் சுற்றி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல்வேறு நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு, பாசனத்துக்கும், மழைநீர் சேமிப்புக்கும், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதன் ஒரு பகுதியான சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமையம்பாளையம் ஏரி, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் தேங்கியதுடன், கழிவுநீர் கலப்பு மற்றும் போதிய நீர்வரத்துப் பாதைகள் இல்லாததால் ஏரியின் பயன்பாடு குறைந்தது.
இந்நிலையில் ஏரியை மீட்டெடுக்கும் வகையில், வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் நிதி ஆதரவுடன், கம்யூனிட்ரீ அமைப்பு உள்ளூர் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரியை புனரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டன.
ஏரியில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, நீர்வரத்து மற்றும் நீரோட்டப் பாதைகள் சீரமைக்கப்பட்டதன் மூலம் நீண்ட காலமாக பயன்படாமல் இருந்த சோமையம்பாளையம் ஏரி தற்போது நீரை சேமித்து வைக்கும் வகையில் மீண்டும் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் ஏரியை கோவை மாவட்ட உதவி ஆட்சியர் துஷார் சிங் திறந்து வைத்தார்.
சோமையம்பாளையம் ஏரியின் புனரமைப்பு மூலம் உள்ளூர் நீர் சேமிப்பு வலுப்படுத்தப்படுவதுடன், கோவையின் பாரம்பரிய நீர் மேலாண்மை முறையை அடுத்த தலைமுறையினருடன் இணைக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.
இந்நிகழ்வில் வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சலில் நாகேஷ் தலால், தலைமை மனிதவள அதிகாரி லியோனல் பால் டேவிட், கம்யூனிட்ரீ அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் கான், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



