கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் உயிரிழந்தார். இன்று அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு இறந்த ராமலட்சுமி உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைத்திருந்தனர். இன்று காலை துக்க நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு ஏராளமான பேர் வந்திருந்தனர். அப்போது அப்பகுதியில் காலை 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உடனே ஜெனரேட்டர் மூலம் பிரேசர் பாக்ஸ்க்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது.
ராமலட்சுமி உடல் இருந்த அறையில் இருந்த உறவினர்கள் வெளியே ஓடினர். சிலர் ஒரு அறையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பத்மாவதி, பானுமதி ஸ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்டனர். அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பத்மாவதி (55) என்பவர் இறந்தார். மீதி மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துக்க நிகழ்ச்சிக்காக சென்ற உறவினர்கள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.