fbpx
Homeதலையங்கம்மோடி சொல்வதும் பாஜக செய்வதும் வேறுவேறு!

மோடி சொல்வதும் பாஜக செய்வதும் வேறுவேறு!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான வாக்குறுதிகளாக சில இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: “ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும்.

யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில் பி.பி.எல் திட்ட பயனாளர்களுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி பம்பு செட் அமைப்பவர்களுக்கு 80% மானியம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாட்களுக்கு முன்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கக்கூடாது, அதனால் மாநிலங்களின் நிதி ஆதாரம் பாதிக்கப்படும் & வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இதற்கு முன் நடந்த சில மாநிலத் தேர்தலின் போதும் இலவசங்கள் கூடாது என இப்படித் தான் இடித்துரைத்திருந்தார். ஆனால் அவரது கட்சியான பாஜகவோ தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவித்து வாக்குகளுக்கு வலை வீசியது.

கர்நாடகத்திலும் அதுவே தொடர்கிறது. பிரதமர் பேசியது இலவசம் வேண்டாம் என்று …ஆனால் தேர்தல் அறிக்கையோ இலவசங்களை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பேசியபடி, இலவசமே தரமாட்டோம் என்று கூறி கர்நாடகத் தேர்தலில் பாஜக களமிறங்கி இருந்தால் பிரதமர் மோடியை நாடே பாராட்டி இருக்கும்.

தன் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியிலேயே தன் கொள்கைளை செயல்படுத்த முடியாத போது, இலவசம் வேண்டாம் என பிரதமர் மோடி பேசுவது சரியா? சொல் ஒன்று, செயல் வேறாக இருக்கிறதே.

காங்கிரசும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ரூ.2000 உரிமைத் தொகை, இலவச மின்சாரம் என அறிவித்துள்ளது.
ஆனால் அக்கட்சி இலவசம் கூடாது என்று சொல்லவில்லை.

இலவசங்கள் பொதுமக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழுத்தமான கருத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது.

இக்கருத்தை ஏற்க மறுக்கும் பாஜக இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட இலவசங்களை பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரம் செய்யும் போதே அறிவிக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? இலவசங்களை வழங்கப்போவதாக பாஜக அறிவித்திருப்பது குறித்து பிரதமர் மோடி தனது தொடர் பிரசாரத்தின்போது வாய் திறப்பாரா?

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா…என்று தான் நாட்டு மக்கள் முணுமுணுக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img