fbpx
Homeபிற செய்திகள்கோவை குடியரசு தினவிழா - 1500 போலீசார் பாதுகாப்பு

கோவை குடியரசு தினவிழா – 1500 போலீசார் பாதுகாப்பு

கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வ உ சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

மாநகர போலீஸ் கமிஷனர்

பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய ரெயில் நிலையம், போத்தனூர், சிங்காநல்லூர், வடகோவை ரெயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கும் இல்லாத வகை யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னர் தான் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும்.பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.

மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img