fbpx
Homeபிற செய்திகள்ஊருக்குள் உலா வந்த ஒற்றை ஆண் காட்டு யானை - அச்சத்தில் சிறுமுகை பகுதி மக்கள்

ஊருக்குள் உலா வந்த ஒற்றை ஆண் காட்டு யானை – அச்சத்தில் சிறுமுகை பகுதி மக்கள்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நகர பகுதியில் உலா வந்த காட்டு யானையால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுமுகை நகர பகுதியில் பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் தொழிற்சாலைக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இங்கு முகாமிட்டுள்ளன..

ஆலைக்குள் காடு போல் வளர்ந்து கிடக்கும் புதர்களில் தங்கியுள்ள யானைகள் அவ்வப்போது தொழிற்சாலையை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவது வழக்கமாகியுள்ளது..

இன்று மாலை இதே போல் ஆலையை விட்டு அதன் உடைந்த சுவர் வழியே வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானையொன்று சிறுமுகை நகரப்பகுதியில் உள்ள சாலை வழியே உலா வந்தது.

பழத்தோட்டம் என்னுமிடத்தில் சாலையில் நடந்து சென்று தான் தங்கியுள்ள ஆலைக்குள் மீண்டும் செல்ல முயன்ற யானை சற்று நேரம் வழி தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்ட முயன்றனர். பின்னர் ஒரு வழியாக தான் வந்த வழியை கண்டறிந்த யானை நிதானமாக நடந்து ஆலைக்குள் சென்று மறைந்தது.

ஆலைக்குள் முகாமிட்டுள்ள யானைகள் எந்த நேரமும் மீண்டும் ஊருக்குள் உலா வரத்துவங்கும் என்ற நிலையில், இவற்றை காலியாக கிடக்கும் தொழிற்சாலைக்குள் இருந்து வெளியேற்றி அடர்ந்த காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கின்றனர்..

படிக்க வேண்டும்

spot_img