மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. மேலும்,அதன் வாய்ப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறையினர்முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதேபோல் வனத்துறையினருக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமிலிருந்து வளவன், பைரவா என்ற இரு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.
மேலும்,யானையை பிடிக்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து விஜய், வசீம் என்ற இரு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. பின்னர்,அவை மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பாகுபலியினை தீவிரமாக கண்காணித்த வனக் கால்நடை மருத்துவர்கள் குழு பாகுபலி யானை முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும்,மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அறிக்கை அளித்தது.
அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை சாடிவயல் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வகையில் கடந்த சில தினங்களாக பாகுபலி யானையினை கண்காணித்து வந்த போது யானையும் முழு உடல் நலத்துடன் இருந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை கும்கி யானை வசீம் மீண்டும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கோவை சாடிவயல் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட லாரி மூலம் ஏற்றப்பட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலையோ அல்லது நாளையோ வாகனத்தில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.