ஆடி குண்டம் திருவிழா பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு திடீர் விசிட் செய்து நடிகர் யோகி பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்தார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டின் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியுள்ளது.
வரும் 25 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தற்போது குண்டம் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான யோகிபாபு நேற்றிரவு வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்தார்,
கோவிலில் அம்மனை வழிபட்ட யோகி பாபுவிற்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. அம்மனை வழிபட்ட பின்னர் கோவில் வளா கத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு சென்ற நடிகர் யோகிபாபு அங்கு ஆன்மீக புத்தகங்களை விலைக்கு வாங்கிச் சென்றார்.
யோகிபாபு வருகை குறித்து அறிந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.