திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் சமூக நீதி விடுதிகளின் தலைமை ஆசிரியர்கள், காப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்களின் உறுதித்தன்மை, பராமரிப்பு பணிகள், கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் தவறிய பாடங்களில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை தனிப் பதிவேட்டில் பதிவு செய்து, மெதுவாகக் கற்கும் மாணவர்களை தனிப்பட்ட முறையில் ஊக்குவித்து, இந்த கல்வியாண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களும், உயர்ந்த தேர்ச்சி விகிதமும் பெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் காப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



