fbpx
Homeபிற செய்திகள்பெண்களின் பாதுகாப்புக்காக இயந்திரக் காவலர்கள் ‘ரெடி’

பெண்களின் பாதுகாப்புக்காக இயந்திரக் காவலர்கள் ‘ரெடி’

பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிதாக இயந்திரக் காவலர்களைத் தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. சென்னை மாநகரில் பரவலாக ‘ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்’ என்ற இந்த புதிய பாதுகாப்புக் கருவி, ஜூன் மாதம் முதல் 200 இடங்களில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரக் காவலர் கருவியானது 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. மேலும், 360 டிகிரியில் சுழலக்கூடியது. பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்கொண்ட இந்தக் கருவியில் எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான் இருக்கும். இதை லேசாக அழுத்தினால் போதும், எச்சரிக்கை ஒலி எழுப்புவதுடன் உடனடியாக காவல்துறைக்கு உதவி அழைப்பு செல்லும்.


மேலும், ‘ஜிபிஎஸ்’ மூலம் துல்லிய இட கண்காணிப்பு, உயர்தர கேமரா எனப் பல்வேறு வசதிகள் உள்ளன. ரோபோட்டிக் காப் சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை, ஆபத்தில் இருக்கும் ஒருவர் அல்லது அவருக்காக மற்றொருவர் அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல்துறைக்கு அழைப்பு செல்வதுடன், அருகில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதற்கிடையில் காவலர்கள் மிக விரைவாக அவ்விடத்திற்கு வந்து விடுவார்கள்.


குறிப்பாக, கேமராவில் பதிந்துள்ள நிகழ்வுகளைக் கொண்டு புலன் விசாரணையைத் தொடங்கி நடவடிக்கை எடுத்திட பெரிதும் உதவும் வகையில் இந்த ‘ரெட் பட்டன்-& ரோபோட்டிக் காப்’ அமைக்கப்பட்டுள்ளது.


சென்னையின் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள் என முக்கிய இடங்களில் இந்த இயந்திரக் காவலரின் பணி விரைவில் தொடங்கும் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.


“இந்த இயந்திரக் காவலர்களால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இந்த சேவையை கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட அனைத்து மாநகரங்களிலும் செயல்படுத்தும் நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்தலாமே,” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தமிழக காவல்துறையின் மிகச் சிறந்த முயற்சி – சென்னையில் இந்த திட்டத்தை தன் முயற்சியால் சாத்தியப்படுத்திய மாநகர காவல் ஆணையர் அருணுக்கு பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img