புதுக்கோட்டையில் தமிழ்நாடு மனநல மருத்துவச் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான 2 நாள் மனநல மருத்துவக் கருத்தரங்கில், கருத்தரங்க மலரை வெளியிட்டு எம். எம்.அப்துல்லா எம்.பி. பேசியதாவது:
இன்றைய பரபரப்பான சூழலில் மனநல மருத்துவம், ஆலோசனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எல்லோருமே மன உளைச்சலில் இருக்கும் சூழலில், மருத்துவர்களுக் குமான மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்படுவது அவசியம்.
தமிழ்நாட்டில் பெண்களின் கல்வி, வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெண்களின் மனவலிமை அதிகரித்திருக்கிறது.
இதுதொடர்பான ஆய்வுகளையும் மனநல மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுவான மனநல ஆய்வுகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டு அவற்றைப் பதிவு செய்து எதிர்கால சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும்.
பழைய அரசு மருத் துவமனை வளாகத்திலேயே விரிவான மனநல மருத்துவ சிகிச்சை மையம் அமைப்பதற்காக முதல்வரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடக்க நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மூத்த மருத்துவர்கள் செ.ராமசுப்பிரமணியம், வி.ஜெயந்தினி, விஜய் சுவாமிநாதன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். அரசு மனநலக் காப்பகத்தின் இயக்குநர் மலையப்பன், மாநிலப் பொருளாளர் டாக்டர் சிவசைலம், மாவட்ட மனநல மருத்துவச் சங்கத்தின் தலைவர் எம். கே.சமான் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
இக்கருத்தரங்கு குறித்து மாநில மனநல மருத்துவச் சங்கத்தின் மக்கள் தொடர்புக்குழுத்தலைவர் டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம் கூறுகையில், போதை மீட்புச் சிகிச்சைகள், தாய்மார்களின் மனக்கவலை நோய், சட்டம் சார்ந்த கல்வி, உடல் ரீதியான அறிகுறிகளில் உளவியல் சிக்கல்கள், மனநல மருத்துவ மாணவர்களின் சிக்கல்கள் உள்ளிட்ட தலைப் புகளில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது என்றார். முடிவில் பொருளாளர் சோபியா நன்றி கூறினார்.



