fbpx
Homeதலையங்கம்திமுக, அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்!

திமுக, அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்!

கடந்த மார்ச் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆயினும், ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்டத் தேர்தல் முடிந்து, ஜூன் 4ஆம் தேதியன்றுதான் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

கடந்த முறையைப் போலவே, இம்முறையும் திமுக கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெறும் என்பதே பெரும்பாலான அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. கருத்து கணிப்புகளும் இதனையே வெளிப்படுத்தி உள்ளன.

உளவுத்துறை அறிக்கையும் திமுகவின் தேர்தல் வியூகக் குழுவும் வழங்கிய அறிக்கையும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றிபெறும் எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கட்சி மேலிடத்திற்கு அறிக்கை வழங்கியுள்ளனர். தேர்தலின்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் யார் யார், சரிவரப் பணியாற்றாதவர்கள் யார் யார் என்ற விவரம் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு கட்சியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதனிடையே, இம்முறை பாஜக கூட்டணியில் இடம்பெறாமல், தேமுதிகவுடன் கைகோத்துக் களம் கண்டுள்ள அதிமுகவும் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று தம் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், சில மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கான பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்று கட்சியினரே மேலிடத்திற்குப் புகாரளித்து வருகின்றனர்.

அத்துடன், அமைப்புச் செயலாளரான சி.பொன்னையன், ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும் புகார்களையும் பட்டியலிட்டு, ஓர் அறிக்கையாக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அமமுக என பிளவுபட்டுள்ள நிலையில், இம்முறை அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அரசியல் பார்வையாளர்கள் பலரும் எதிர்மறையான கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிலும் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்பதில் சந்தேகமில்லை. திமுகவிலும் அதிமுகவிலும் ஏற்படப் போகும் மாற்றங்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் கொண்டு அதிரடியாகத் தான் இருக்கும்.

காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img