Homeபிற செய்திகள்சங்ககிரி அருகே லாரிமீது சொகுசு பேருந்து மோதி விபத்து -ஓட்டுநர் உட்பட 15 பேர் காயம்

சங்ககிரி அருகே லாரிமீது சொகுசு பேருந்து மோதி விபத்து -ஓட்டுநர் உட்பட 15 பேர் காயம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொகுசு பேருந்து சரக்கு லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வினோத் ராஜ் (31), தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (வியாழக்கிழமை)இரவு சுமார் 10 மணியளவில் 45 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோவை நோக்கி சொகுசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். சங்ககிரி அருகே டிவிஎஸ் மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி திடீரென சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த சொகுசு பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் வினோத் ராஜ் மற்றும் பயணிகளான கோபியைச் சேர்ந்த ஜனனி (23), சென்னையைச் சேர்ந்த ஜான்சன் வில்லியம்ஸ் (52), மூர்த்தி (52), ஞானசுந்தரம் (37), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அருணேஷ் (25) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்ககிரி போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img