கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட அவிநாசி சாலை புதிய உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப் பட்டது. ஜெர்மனி தொழில் நுட்பத்தில் உருவான இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்துசென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.செந்தில்பாலாஜி, ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மரு.ஆர்.செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமர் க.கிரியப்பனவர், தலைமை பொறியாளர் (திட்டங்கள்) முனைவர் ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள், ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித் தடங்களுடன், தென்னிந்தி யாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் இந்தியாவில் 3வது நீளமான தரைவழிப்பாலம் ஆகும்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவைக்கு வந்து, செல்லும் வெளியூர் மக்கள் நிம்மதி அடைவார்கள்.
முதல்வர் வருகையை முன்னிட்டு அவிநாசி ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மாநகரின் அனைத்து சோதனை சாவடிகளிலும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை அரசு கலை கல்லூரியில் நடக்கும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விபத்தில்லா கோவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மதியம் 12 மணிக்கு கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கோவையில் ரூ.81 கோடியில் 5 தளங்களுடன் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 2.46 ஏக்கர் நிலத்தில் 8.5 லட்சம் சதுர அடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக தங்கநகை உற்பத்திகென தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது.

தங்க நகை உற்பத்தி பயிற்சி மையமும் தங்க நகை பூங்காவில் அமையவுள்ளது.
தொடர்ந்து மதியம், 2:30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில், ஆறு துணை கமிஷனர்கள், 26 உதவி கமிஷனர்கள், 62 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக ஐந்து மாவட்டங்களில் இருந்து போலீசார்
வரவழைக்கப்பட்டு இருந்தனர்.



