fbpx
Homeபிற செய்திகள்பசுமை பட்டாசு வெடித்து காற்றின் மாசு குறைப்போம்!

பசுமை பட்டாசு வெடித்து காற்றின் மாசு குறைப்போம்!

ஒவ்வொரு தீபாவளியின்போதும் பட்டாசுகளால் ஏற்படும் மாசு என்பது, ஆரோக்கியமான சமூகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்து விடுகிறது. குறிப்பாக காற்றின் தரம் மோசமடைவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு ஒருநாள் முன் தொடங்கி, தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளும் சென்னையில் காற்றின் தரத்தை அளவிட்டபோது, அது அபாயகரமான அளவில் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும்.

ஆனால், பட்டாசு வெடிக்கும்பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.

இதை சுவாசிக்கும் போது உடலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு சென்னை, உலக அளவில் மிக மோசமான காற்று பாதித்த நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. அளவீட்டு முறைப்படி காற்று மாசு 300ஐ தொட்டுவிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம். 2022 தீபாவளியன்று சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 700ஐ கடந்திருந்தது.

அதனால் தான் தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் அளவை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது, வாழ்வியல் கலாச்சாரமாக மாறி விட்டது.

ஆனால் காற்றில் மாசு அதிகரிப்பதைத் தடுக்க வேண்டியது அதை விட முக்கியம் அல்லவா? அதனால் அரசாங்கம், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு காலையில் 2 மணிநேரம் இரவில் 2 மணி நேரம் என நேரத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது.

பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவோம். அதேநேரத்தில் கடந்த ஆண்டு வெடித்த அளவை விட சற்று குறைவாக பட்டாசுகள் வாங்கி வெடிப்போம். அதிக மாசு ஏற்படுத்தும் பெரியபெரிய பட்டாசுகளை முடிந்தவரை தவிர்த்து, அதிக மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை அதிகமாக வாங்கி வெடித்து மகிழலாம்.

சிவகாசியையும் வாழ வைப்போம் – நாமும் சுகாதாரமாக வாழ முயற்சிப்போம்!

படிக்க வேண்டும்

spot_img