முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக முதல்வர் மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் எழுந்தது.
பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட காணொளிகளும் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் உள்ளிட்ட 5 பெண்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அவர் மீது வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024 மே 31ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.
பி.கே.சிங் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல்துறை இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தது. பிரஜ்வல் வீட்டு பணிப்பெண் கடந்த 2021ஆம் ஆண்டு, இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காணொளியை நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக காவல்துறை தாக்கல் செய்தது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள பிரஜ்வலின் அங்க அடையாளங்கள், இடதுகை மச்சம், செல்போன் பதிவு, பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணிப்பெண்ணின் உடைகள் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள், பிரஜ்வலின் நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரது வாக்குமூலம் உள்ளிட்டவை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
வழக்கின் அனைத்துகட்ட விசாரணையும் கடந்த 20ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பிரஜ்வலுக்கான தண்டனை தீர்ப்பை ஆகஸ்ட் 2ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் வெளியிட்டார்.
பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறைத் தண்டனையுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்படுகிறது, என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அரசியல் செல்வாக்கு மற்றும் உயர்மட்ட குடும்ப மரபு இருந்தபோதிலும், டிஜிட்டல் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்கள் தீர்க்கமானவை என நிரூபிக்கப்பட்டதால் தான் பிரிஜ்வல் ரேவண்ணாவால் தப்ப முடியாமல் போனது.
சாகும்வரை ஆயுள் தண்டனை பெறுவதற்கு செல்போனில் பதிவான காட்சிகள், சிசிடிவி காட்சிகள் தான் பிரதான ஆதாரமாக இருந்திருக்கின்றன.
இன்றைக்கு கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய டிஜிட்டல் சாதனங்கள் பெரிதும் உதவி வருகின்றன. அது தான் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறது.
முன்னாள் எம்.பி. என்பதால் தற்போது அவர் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். நேற்று காலை அவருக்கு அதிகாரப்பூர்வமாக கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டது.
உயர் பதவியில் இருந்தாலும் வலுவான அரசியல் பின்னணி இருந்தாலும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் குற்றங்களை இழைப்பவர்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்ற நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஓர் கடும் எச்சரிக்கை!



