தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து ‘இளை யோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை’-யை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள் பேசுகையில், தமிழர் மாண்புகளைத் தெரிந்து கொள்ள இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாசறை என்பது பட்டை தீட்டப்பட்ட இளைஞர் களை மேலும் மெருகேற்றும் இடம் என்றார். இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசும்போது, தமிழ் இலக்கியங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் சீரிய முயற்சியில் அரசின் நோக்கங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்துள்ள முன்னெடுப்புகளையும் குறிப்பிட்டார்.
விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் துவக்கி வைத்து பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மா.ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும் என்ற பொருண் மையில் வழக்கறிஞர் த.ராமலிங்கம், கவிதைகளைத் திறந்த கதை உலகம் என்ற தலைப்பில் கோவை நா.கி.பிரசாத், அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும் என்ற கருத்தில் கவிதாயினி மீ.உமா மகேசுவரி, செம்மொழித் தமிழின் சிறப்பு என்ற தலைப்பில் முனைவர் தெ.கணேஷ்குமார், நாடகத்திலும், திரை யிலும் நடந்த தமிழ் என்ற தலைப் பில் வழக்கறிஞர் க.சிவகுருநாதன், புதுக்கவிதைகளின் தோற்றமும் ஏற்றமும் என்ற பொருண்மையில் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் பேசினர்.
நிறைவு விழாவில், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கே.பி.ஆர்.குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பேசினார்.