ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் பெரிய கள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்பாபாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் நேந்திரன் ரகம் மற்றும் கதளிஜி – 9 ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் அதிக அளவில் கேரளா விற்கும் அடுத்தபடியாக மும்பைக்கும் செல்கிறது.
நேந்திரன் வாழை கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால் சுற்று வட்டார விவசாயிகள் நேந்திரன் வாழை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் ஓரளவு நல்ல விலை கிடைத்தது. இதன் உற்பத்தி பரவலாக அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்ற நேந்திரன் தற்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:-
நேத்ரன் வாழைத்தாறுகளை வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து வெட்டி செல்கின்றனர். கடந்த மாதம் நேத்திரன் வாழைத்தார் கிலோ 35 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விலை போனது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு 600 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ 20 ரூபாய் வரை விலை போகிறது. ஆண்டு முழுவதும் வாழை மரங்கள் காற்றில் விழாமல் பாதுகாத்து வருகிறோம். கிலோ 30 ரூபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.