ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுனர் பணி நடத்துனர் பணி எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாக தெரியும். சாலை விபத்து ஒட்டு மொத்தமும் அவர்களால் தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஒன்வே என்று போர்டு வைத்திருப்பார்கள் அது தெரிந்தே அந்த பகுதியில் செல்வார்கள்.
சிக்னலை முறையாக மதிக்க வேண்டும். ரெட் சிக்னல் விழுந்தாலும் சில சமயம் வாகன ஓட்டிகள் நிற்காமல் கடந்து செல்வதை பார்த்து உள்ளோம். விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஆலோசனைப்படி நல்வாழ்வு துறையில் ஒரு திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மூலமாக முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார். எங்காவது விபத்து ஏற்பட்டால் 48 மணி நேரத்திற்கு அவர்களுக்கு எல்லா வசதிகளையும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர் யார் என்று கூட கேட்காமல் மருத்துவமனையில் அனுமதித்து அது அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் சரி முழுமையாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல அதற்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கும் சன்மானம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை நாம் மதிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் தான் போக வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இன்று ஆறு பேர் வரை செல்கிறார்கள். இதை தவிர்த்து பாதுகாப்பு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
மது வாங்க வருபவர்களை தரக்குறைவாக பேசக்கூடிய ஊழியர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக் கப்படும். வரும் 8-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் காலை 2 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
தி.மு.க.வில் இளைஞரணிக்கு வாய்ப்பு தருவது இயற்கையான விஷயம். தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.