fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி துவக்கம்

நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி துவக்கம்

நீலகிரி மாவட்டம், உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மஸி கல்லூரி கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற “என் கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில், மாணவர்களின் கல்வி இடைநின்றலை தவிர்த்திடும் வகையிலும், அடிப்படை கல்வி பயின்றுள்ள அனைத்து மாணவர்களையும் விடுதலின்றி உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக 2022-23-ம் ஆண்டு முதல் உயர்க்கல்விக்கான வழிக்காட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், 40 அரசு பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 24 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகள் இயங்கி வருகிறது. மேற்படி பள்ளிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி, தேர்வு முடிவினை எதிர் நோக்கி காத்திருக்கும் 2,561 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு அடுத்த உயர்கல்வியில் சேருதல் குறித்தும், வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகள், மேற்படிப்பில் சேர தேவையான வழிமுறைகள், மேற்படிப்புகளுக்கு அரசால் வழங்கப்பெறும் ரூ.3,500/- முதல் ரூ.36 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகை குறித்து விவரங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எளிதில் விளங்கிடும் வகையில் தொழில் நெறி வழிகாட்டுநர்கள் மூலமாக உயர்க்கல்வி வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும், உயர்கல்வியில் உள்ள கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் குறித்த பொதுவான படிப்புகள் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் உள்ள துணை படிப்புகள் குறித்தும் விளக்கி தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மதிப்பெண்கள் அடிப்படையில் காலதாமதமின்றி உயர்கல்விக்கு விண்ணப்பித்தல் குறித்தும், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் அல்லது தோல்வி அடைந்த மாணவர்களும், இடைநின்றலின்றி பாலிடெக்னிக், தொழிற்பயிற்சியில் சேர்ந்து உயர்வினை எய்திடவும், உயர் கல்வியினை தொடராத மாணவர்களே இல்லை என்னும் நிலையை நீலகிரி மாவட்ட மாணவர்கள் எய்திடவும் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை பயன்படுத்தி கொள்ளுமாறும் உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களையும், வழிகாட்டுநர்களிடம் கேட்டு தெளிவடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலிருந்து பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள சுமார் 300 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, அவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின நல அலுவலர் ஜெயக்குமார், (MMT & NUTURE) மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மரு.முஹம்மத், முனைவர் சத்தியபிரியா, உயர்கல்வி வழிகாட்டுபவர் பிரதீப் குமார், ஜெ.எஸ்.எஸ்.பார்மஸி கல்லூரி துணை முதல்வர் கே.பி.அருண், நிர்வாக அலுவலர் பசவண்ணா, உதகை அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதி பட்டதாரி காப்பாளர் மாயகிருஷ்ணன் உட்பட மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img