2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து ஒருவாரமாகி விட்டது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு இனி நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடந்து முடியும் வரை, இன்னும் 39 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் முடிவுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் வேளையில் அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சி மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களை அழைத்து பேசி வெற்றியின் சாதக பாதகங்களை கணித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? வாக்கு வித்தியாசம் எப்படி இருக்கும்-? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார். அவரிடம் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி நிச்சயம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியையும் சேர்த்து நாற்பதும் நமதே என்று மு.க.ஸ்டாலின் முழு நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
ஓரிரு இடங்களையாவது கைப்பற்றி தமிழ்நாட்டில் காலூன்றி விட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய பாஜக கூட்டணிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். கட்சியின் முன்னணி பிரபலங்களை எல்லாம் களமிறக்கி, அண்ணாமலை தலைமையில் பிரசாரத்தை செம்மையாக செய்தனர். சில தொகுதிகளில் வெற்றிக்கனியை ருசிப்போம் என்று பாஜக எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயரும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த முறை பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு தர்மபுரி தொகுதியில் எப்படியாவது தனது மருமகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் தீவிரமாக களமிறங்கி பணியாற்றினார். நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அவரும் கட்சி நிர்வாகிகளோடு தொலைபேசியில் ஆலோசித்து இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கட்சி வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தேர்தல் மூலம் தனது தலைமையிலான அதிமுகவிற்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். பாமக, தனது கூட்டணியில் இல்லாமல் போனது அதிமுகவிற்கு பெரும் சரிவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி.தினகரனும் ஜெயித்து விடக்கூடாது என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாஜக வரவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் இந்த தேர்தலில் தனது கட்சியின் வாக்கு வங்கி சதவீதம் உயரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.
ஆக, திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர்கள் அனைவரும் 40 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என வழக்கம் போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4 ஆம் தேதி வரை இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெறுவார், அந்தத் தொகுதியில் அவர்தான் வெற்றி பெறுவார், இல்லை, இல்லை மொத்தமும் இவர்கள்தான், அல்ல அவர்கள்தான். ஒன்றியத்தில் மோடி மீண்டும் பிரதமராவாரா? இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
மக்கள் பரவாயில்லை, பேசிக்கொண்டே அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். அரசியல்வாதிகள்தான் பாவம், என்னதான் வெளியில் ஆயிரம பேசினாலும் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல இருந்து கொண்டிருக்கிறார்கள்.
வாக்காளர் பெருமக்கள் இதுவரை 2 கட்டத் தீர்ப்புகளை எழுதி விட்டனர். இன்னும் 5 கட்டத் தீர்ப்பை எழுதத் தயாராகி வருகிறார்கள். இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் நாள் தான் ஜூன் 4.
அந்த பொன்னான நாளின் வரவுக்கான கவுன்ட் டவுனைத் தொடங்கி இன்னும் 39 நாட்கள் காத்திருப்போம்!