இந்திய மின் சாதன உற்பத்தித் துறையின் முன்னணி அமைப்பாக திகழும் இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA) சார்பாக ‘எலெக்ராமா’ 15-வது கண்காட்சி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறையின் மூத்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னணுவியல் துறையின் கண்காட்சியான எலெக்ராமா 2023, வரும் பிப்ரவரி 18 முதல் 22-ம் தேதி வரை நொய்டாவில் நடைபெற உள்ளது.
ஐஇஇஎம்ஏ அமைப்பும் மற்றும் அதன் உறுப்பினர்களும் இந்தியாவை மின்மயமாக்கு தல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பசுமை மயமாக்குதல் என்னும் 100 ஆண்டு கூட்டாண்மை இலக்கை அடைய மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
“நிலையான எதிர்காலத்திற்காக ஆற்றலை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் மின்சாரம் சார்ந்த புதுமை கண்டுபிடிப்புகள், ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன், எரிபொருள் கலம், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற உள்ளன.
ஐஇஇஎம்ஏ தலைவர் ரோகித் பதக் கூறியதாவது:
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக இது அமையும்.இந்த சவாலில் 10 முதல் 12 இடங்களை பிடிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த அனுமதிக் கப்படும் என்றார்.
ஐஇஇஎம்ஏ தென் மண்டலத் தலைவர் ஆர். பிரகாஷ் கூறுகையில், இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. கண்காட்சி மூலம் மின்சாரம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பலத்தை வெளிப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இதில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தக விவரங்கள் சார்ந்த பரிவர்த்தனை இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
‘எலெக்ராமா 2023’ கண்காட்சி தலைவர் ஜிதேந்திர அகர்வால் கூறுகையில், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் முதல் உலகம் முழுவதும் இருந்து இந்த பொருட்களை வாங்குவதற்கு 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன என்றார்.
ஐஇஇஎம்ஏ தென் மண்டல துணைத் தலைவர் சுதிர் கோகலே, மாநில ஒருங்கிணைப்பாளர் அருணா ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர்.