15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத்தான் கூறவில்லை. 15 பேர் என்று மட்டுமே குறிப்பிட்டேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 25 லட்சம் பட்டாக்கள் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், பட்டா பெறும் பயனாளிகள் அனைவருக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் வீடுகள் வழங்கப்படும் என்றும், நடப்பு ஆண்டில் ஐந்து லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நெல், பால் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலையை முதலமைச்சர் உயர்த்தியதன் மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களும் சேர்க்கப்படும். பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவைச் சேர்ந்த 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தான் கூறவில்லை. 15 பேர் என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால், ஊடகங்கள் அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று சேர்த்துச் செய்தி வெளியிட்டுவிட்டன.
எல் நினோ பாதிப்புகள் தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா, பட்டா மாறுதல், பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு தொடர்பான சேவைகளைத் தவிர, வருவாய்த் துறையின் பிற சான்றிதழ்களைத் தமிழகம் முழுவதும் இணையவழியில் 15 நாள்களுக்குள் பெறலாம்.
பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராமங் களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.42 கோடி மதிப்பிலான புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜயபாலாஜி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனந்தமோகன், சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



