பிறக்கும் குழந்தைகளுக்குக் கேட்கும் திறன் குறைபாடு உள்ளதா என்பதைப் பெற்றோர்கள் உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும் என்று காது, மூக்கு, தொண்டை மற்றும் பேச்சுப் பயிற்சி நிபுணர் ஆர். சபரீஷ் வலியு றுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, கேட்கும் திறன் குறைபாடாகும் (இருப்பினும் இது மட்டுமே ஒரே காரணமல்ல; மூளை வளர்ச்சி அல்லது பிற உடல் சார்ந்த காரணங்களும் இருக்கலாம்). கருவில் இருக்கும்போதே செய்யப் படும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் குழந்தையின் கேட்கும் திறனைக் கண்டறிய முடியாது. எனவே, குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள்ளேயே, நவீன மருத்துவ முறைகளான OAE அல்லது ABR போன்ற பரிசோதனைகளை மேற் கொள்வது மட்டுமே கேட்கும் திறன் குறைபாட்டை உறுதி செய்ய உதவும்.
பிறவிக் குறைபாடுகள் அல்லது மரபணு மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை, ‘காக்லியர் இம்ப்லாண்ட்’ (Cochlear Implant)அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். குழந்தைகளுக்கு இச்சிகிச்சை 7 வயது வரை மிகவும் பயனுள்ளதாக அமையும். அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இச்சிகிச்சையைப் பெறலாம். தகுதியான நபர்களுக்கு, 60 வயது வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சை வழங்கப்படுகிறது.
இயற்கையான முதுமை, அதிகப்படியான இரைச்சல், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். பொதுவாக, மனிதர்களால் 85 டெசிபல் வரையிலான ஒலியைத்தான் பாதுகாப்பாகக் கேட்க முடியும். 110 டெசிபல் வரையிலான ஒலியை நம் காதுகளால் உணர முடியும் என்றாலும், இத்தகைய அதிகப்படியான ஒலி காதுகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். பட்டாசுகள், தொழிற்சாலைகள் மற்றும் அதிக ஒலியுள்ள இடங்களில் இருப்பவர்கள், ஒலியின் தாக்கத்தை 60 சதவீதம் வரை குறைக்கும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், செல்போன் மற்றும் இயர்போன்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, காதுகளைச் சுத்தம் செய்யச் சேஃப்டி பின்கள் அல்லது இயர் பட்ஸ் (Ear buds) பயன்படுத்துவது காதுகளைப் பாதிக்கும். இத்தகைய பழக்கங்களால் காது மெழுகு உள்ளே தள்ளப்படுதல், தொற்று அல்லது செவிப்பறை பாதிப்பு ஏற்படலாம். எனவே, இத்தகைய பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. தற்போது ரூ. 5,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை பல்வேறு வகையான செவித்திறன் கருவிகள் கிடைக்கின்றன. ரீசார்ஜ் செய்யக்கூடிய நவீன கருவிகளும் வந்துவிட்டன. ரத்த அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படும் தலைசுற்றல், ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் அல்லது காது தொடர்பான பாதிப்புகளை, தகுந்த மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்,” என்றார்.



