சீனாவை தாயகமாக கொண்ட அக்குபஞ்சர் மருத்துவ முறை கடந்த 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மருத்துவம் மருந்துகளே இல்லாத மகத்துவம் என்கின்றனர் இதனால் பயனடைந்தவர்கள்.
இதனிடையே, சமநிலை மாறாத வகையில் உடலையும், மனதையும் பராமரிக்க ‘4 கோல்டன் ரூல்ஸ்’ இருப்பதாகவும், இதனை கடைபிடித்தால் நோய் வரும்முன் தவிர்க்கலாம் என்றும், வந்த நோயையும் விரட்டலாம் என்றும் தெரிவிக்கிறார் கோவை சூலூரை அடுத்த காடாம்பாடியைச் சேர்ந்த அக்குபஞ்சர் ஹீலர் கஜலட்சுமி சரவணன். இவர் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் கட்டணமின்றி அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறார்.
அக்குபஞ்சர் சிகிச்சை முறை குறித்து கஜலட்சுமியிடம் கேள்வியெழுப்பினோம். அவர் கூறியதாவது:
அக்குபஞ்சர் சிகிச்சையில் பாரம்பரிய மற்றும் மாடர்ன் முறைகள் உள்ளன. பாரம்பரிய முறையில் ஒற்றைப்புள்ளியில் தூண்டி நோயைக் குணப்படுத்துவார்கள். மாடர்ன் முறையில் 30க்கும் மேற்பட்ட புள்ளிகள் ஒரே நேரத்தில் தூண்டப்படுகிறது. நான் பாரம்பரிய அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறேன்.
நாடியால் ஓடும் நோய்கள் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டே மரபு வழி மருத்துவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நமது உடலில் உள்ள சக்தி ஓட்டப்பாதையில் கழிவுகள் தேங்கினாலோ அல்லது தடை ஏற்பட்டாலோ நோய்கள் ஏற்படுகின்றன. நாடி பிடித்து பார்ப்பதன் மூலம் நமது உடலில் பஞ்ச பூதங்களின் சமநிலை தவறியதைக் கண்டறியலாம். மணிக்கட்டு, உள்ளங்கை உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் நாடி பிடித்துப் பார்க்கலாம்.
பின்னர், தடைபட்ட சக்தி ஓட்டத்தைக் கண்டறிந்து, குறிப்பிட்ட புள்ளியை விரல்கள் அல்லது ஊசி மூலம் தூண்டுவதன் மூலம் நோய் குணமடைகிறது. மயிரிழை அளவிலான நுண்ணிய ஊசியைப் பயன்படுத்துவதால் இதனால் வலி ஏற்படாது. இந்த மருத்துவ முறையில் மருந்துகளே இல்லை.
நாடி பிடித்து நோயைக் கண்டறிய 30 நொடிகளும், புள்ளி தூண்டு சிகிச்சை அளிக்க 30 நொடிகளுமே போதும். உடலின் தன்மையைப் பொருத்து எத்தனை முறை இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். அக்குபஞ்சர் தெரபியை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து ஹீலர்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இதனால் இம்மருத்துவ முறையின் பயன் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை.
உடல் மொழி அவசியம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலமாக தலைவலி முதல் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வரை குணப்படுத்த முடியும். பல நோய்களை குணப்படுத்திய வரலாறுகளும் உண்டு. இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் கால், கழுத்து, முதுகு வலிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. இளைஞர்கள், குழந்தைகள் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கும், இளம் பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.
உடலில் கழிவுகள் தேங்கினால் காய்ச்சல் வரும். அந்த காய்ச்சல் மூலமாக கழிவுகளை உடல் வெளியேற்றும். ஆனால், ரசாயனங்களை உண்டு அந்த காய்ச்சலை தடுக்கிறோம். இது அடுத்தடுத்த உடல் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. இதற்கு உடலுடன் நாம் பழக வேண்டும். உடலுடன் பேசவேண்டும். உடல் மொழியை அறிய வேண்டும். நமது உடலும், இயற்கையும் எப்போதும் தவறு இழைக்காது என்பதை உணர வேண்டும்.
கோல்டன் ரூல்ஸ் அக்குபஞ்சர் சிகிச்சை முறையின் படி, நல்வாழ்வுக்கு 4 ‘கோல்டன் ரூல்ஸ்’ உள்ளன. பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும், தாகத்திற்கு தேவையான அளவு மட்டும் தண்ணீர் பருக வேண்டும், உடலுக்கு ஓய்வு அளிக்க வேண்டும், இரவு 10 மணிக்கு முன் உறங்க வேண்டும்.
ஒவ்வொரு உறுப்புகளும் அதன் சமநிலையை மீண்டும் அடைய நாம் ஓய்வு கொடுப்பது அவசியம். இதனை கடைபிடித்தால் வரப்போகும் நோயைத் தவிர்க்கலாம். வந்த நோயையும் விரட்டலாம். மனம் செம்மையானால் உடலும் செம்மையாகும். எனவே மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது சிலருக்கு காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அது உடலின் கழிவுகளை வெளியேற்றுவதற்கான நமது உடல் மொழி. காய்ச்சல் ஏற்படும் போது நமது உடலுக்கு ஓய்வு, உறக்கம் மூலம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் இல்லை, மருத்துவச் செலவுகளும் இல்லை. மருந்தில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல அக்குபஞ்சர் ஹீலர்கள் உழைத்து வருகின்றனர். அதே குறிக்கோளுடன் நானும் பணியாற்றி வருகிறேன் என்று பெருமையுடன் தெரிவித்தார் திருமதி.கஜலட்சுமி சரவணன்.
இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு gajasaravanan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 9797753517 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
“மருந்தில்லா உலகம்,
நோயில்லா சமூகம் படைப்போம்……”