அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உலகளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியர்களுக்கு மறைமுகமாக ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அது மிகப்பெரிய கிப்ட் ஆகும்.
அதாவது, 2024ஆம் ஆண்டில் சுமார் 39 முறை வரலாற்று உச்சத்தையும், 10 மாதத்தில் 23 சதவீதம் வரையில் உயர்த்த தங்கம் விலை தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பின்பு 10 கிராம் ரூ.4,750 வரை குறைந்துள்ளது, இது கிட்டத்தட்ட 6% குறைவாகும். இந்த விலை சரிவே இந்தியர்களுக்கு கிடைத்த அந்த மிகப்பெரிய கிப்ட்.
குறிப்பாக இந்தியாவில் திருமண காலம் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில் இந்த 6 சதவீத சரிவு மிகப்பெரிய ஜாக்பாட் தானன்றி வேறென்ன?
தங்கம் விலை குறைந்த நிலையில், தங்கத்தை வாங்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நகைக்கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை கடந்த 2 வாரத்தில் அதிகரித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் வெற்றி மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் உயர்வது மட்டும் அல்லாமல் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடும் உள்ளது. இதனால் வட்டி விகித குறைப்பு தடைப்படும் என்பதால் தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிந்தாலும் கூட அதையும் தாண்டி தங்கம் விலை சரிந்துள்ளது.
தங்கம் விலை குறையுமா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அதன் விலை நன்றாகவே குறைந்துள்ளது. இன்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது.
இன்னும் தங்கம் குறையுமோ எனக் காத்திருக்கக் கூடாதுஎன்பதே இந்திய பொருளாதார நிபுணர்களின் அறிவுரை.
இன்னும் 3 மாதங்கள் தங்கம் விலை இப்படி தான் இருக்கும். ஆனால், குறைந்தபட்ச விலையில் தான் வாங்குவேன் என இருக்காதீர்கள்.
எது குறைந்தபட்ச விலை என்பதைக் கணிக்க முடியாது. நமக்கு இப்படி சில மாதங்கள் இடைவெளி கிடைத்துள்ளது. அதன் பிறகே தங்கம் விலை உயரத் தொடங்கும்` என்பது அவர்களின் கணிப்பு.
டிரம்ப் ஆட்சியில் வட்டி குறைப்பு செய்தால், உடனடியாக பணவீக்கம் வந்துவிடும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே தங்கம் வாங்க சரியான தருணம் இதுவாகத்தான் இருக்கும்!