அறிவை விரிவு செய் என்பதை முன் வைத்து நூலகத்தின் முக்கியத்துவத் தையும், வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தையும் மாணவியரிடையே வளர்க்கும் நோக்கில், நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நூலகத் துறை மற்றும் Sapientia Club சார்பில் ‘‘Book Talk & 2026’ நிகழ்ச்சி நேற்று (21ம் தேதி) காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, நூலக அறிவியலின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் 134-ஆவது பிறந்தநாள் நினைவாக, “My Favourite Book” என்ற தலைப்பில் நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா தலைமையில் நூலகத் துறைத் தலைவரும் துணை முதல்வருமான அருட்சகோதரி முனைவர் ஜாக்குலின் மேரி, நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும் நூலகருமான முனைவர் சிவகுமார் பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு, வாசிப்பின் பயன்கள், தனக்குப் பிடித்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் முறை, வாசித்த நூல்களின் கருத்துகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். மேலும், நல்ல நூல்கள் மனிதனின் சிந்தனைய விரிவுபடுத்துவதோடு, படைப்பாற்றல், விமர்சனச் சிந்தனை மற்றும் மொழித்திறனையும் மேம்படுத்துகின்றன என்பதை எடுத்துக்கூறினார்.
மாணவியர் தாங்கள் படித்த நூல்கள் குறித்த கருத்துகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், வாசிப்பு தொடர்பான பல்வேறு ஐயங்களையும் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, மாணவியரிடையே வாசிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டி, அறிவைத் தேடும் மனப்பான்மையையும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தையும் வளர்க்கும் பயனுள்ளதாக அமைந்தது.



