fbpx
Homeபிற செய்திகள்112 புற்றுநோயாளிகள் ஈரோடு மாவட்டத்தில் கண்டறியப்பட்டனர்: அமைச்சர் முத்துசாமி

112 புற்றுநோயாளிகள் ஈரோடு மாவட்டத்தில் கண்டறியப்பட்டனர்: அமைச்சர் முத்துசாமி

ஈரோடு அடுத்த வெள்ளோடு பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை அவர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இருந்தபோதிலும் மக்கள் எளிதாக தங்கள் நோய்களை கண்டறிய மற்றும் சிகிச்சை பெற இந்த சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்திற்கு மூன்று என தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு 1256 முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் 17 வகையான நோய்களுக்கு மக்கள் சிகிச்சை பெறலாம். மேலும் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ சிகிச்சையோடு அடையாள அட்டை ஆதார் அட்டை பெற முடியும்.

பரிசோதனை செய்யப் படும் அனைவருக்கும் மருத்துவ அட்டைகள் வழங்கப்படுகின்றன. இது தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற முடியும். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறலாம். பலருக்கு தங்களிடம் உள்ள நோய் கூட தெரியாமல் உள்ளது.

அவர்கள் இங்கே சோதனையின் போது தங்கள் நோயை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற உதவும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புற்றுநோய் கண்டறியும் சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் கார்டுகள் தரப்பட்டன. அதில் ஒன்றரை லட்சம் பேர் தானாக முன்வந்து புற்றுநோய் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 121 பேருக்கு வாய், மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளது. அதில் உரிய கருவிகள் விரைவில் ஏற்பாடு செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு புற்றுநோய் இருப்பதாக தவறான தகவல் கூறப்படுகிறது. எனினும் புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அது வராமல் தடுக்கவும் நடவடிக்கை மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படுகிறது.

சிறுநீரக விற்பனை பற்றிய குற்றச்சாட்டு விசாரணையில் உள்ளது. அரசு மருத்துவமனையில் தரமான மருந்துகள் மற்றும் போதிய அளவு டாக்டர்கள் உள்ளனர். எனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஆனால் அதைவிட அதிகமாக இல்லம் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுகிறது. அதன் மூலம் வீட்டுக்குச் சென்று நோய்கள் கண்டறிந்து மருந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கந்தசாமி ஈரோடு கிழக்கு எம்எல்ஏ விசி சந்திரகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img