ஈரோடு சிக்கய்ய கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடை பெற்று வரும் புத்தகத் திருவிழா 5 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் 12 ஆம் தேதி புத்தகத் திரு விழா நிறைவடைகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் வரலாற்று நாயகர்கள், ஆன்மிகக் களஞ்சியங்கள், கல்லூரி புத்த கங்கள், அறிவியல், நவீன தொழில் நுட்பம், தன்னம்பிக்கை, இலக்கியம், சமையல் கலை, சிறுவர் உலகம், பெண்கள் முன்னேற்றம் என பலவகையான ரசனைகளுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் தீனி உண்டு.
தொடர்ந்து 21ஆவது ஆண் டாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா அரங்கில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் இடிக்காம தள்ளிப் போங்க என்று பலரும் சொல்லும் அளவுக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் கூட்டம் குறைய வில்லை என்ற போதிலும், புதிய வாசகர்களை ஓரளவு பார்க்க முடிந்தது என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பதிப்பகங்களின் பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது: புத்தகங்கள் விலை உயர்ந்தி ருப்பதற்கு தயாரிப்பு செலவு மிகவும் கூடியுள்ளது முக்கியமான காரணம். பைண்டிங், பிரிண்டிங், அலுவலக வாடகை, ஊதியம் என எல்லாமே கூடியுள்ளது.
புத்தகம் தயாரிக்கும் முறைகளிலேயே நிறைய மாற்றம் வந்துவிட்டது. உதாரணமாக புத்தக அட்டையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் கண்காட்சிக்கு வரும் வாசகர்களிடம் தரமான புத்தகங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் தான்.
300 ஜிஎஸ்எம் ஆர்ட் போர்டில் தான் இப்போது அட்டை போடுகின்றனர். இன்னொரு முக்கிய காரணம் நூலகங்களை நம்பி புத்தகம் போடுவதுமிகவும் சிரமம். அதனால் தேவை அடிப்படையில்தான் இப்போதெல்லாம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
விலைவாசி எல்லா பொருள்களுக்கும் ஏறுவதுபோல புத்தகத் தயாரிப்பிலும் கணிசமான பங்கு உயர்ந்துள்ளது. இதனால் விலையை உயர்த்தி விற்க வேண்டியுள்ளது.
புத்தக விலை உயர்வு எளிய வாசகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மாதம் ரூ.20,000 ஊதியம் பெறுபவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் தினம் குறைந்தது ரூ.200 வரை செலவழிக்கின்றனர். இந்தத் தொகையை ஒப்பிடும்போது இது பெரிய தொகையில்லை.
ஆண்ட்ராய்ட் கைப்பேசிக்கு பல ஆயிரங்களை இளைஞர்கள் செலவிடுகின்றனர். திரைப்படத் துக்கு முதல் நாள் காட்சிக்கு செலவிடும் பணம் இருந்தாலே சிறந்த புத்தகங்களை வாங்க முடியும். பல நாவல்கள் 5 தொகுப்புகள் சேர்த்து ரூ.500 -க்கு கிடைக்கின்றன. தவிர 10 முதல் 40 சதவிகித கழிவில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புத்தக விலை உயர்ந்திருந்தாலும் ஈரோடு புத்தக திருவிழாவில் வாசகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வாசிப்பில் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதை இது காட்டுகிறது.



