fbpx
Homeதலையங்கம்அற்பக் காரணத்துக்காக அர்த்தமற்ற கோரிக்கை!

அற்பக் காரணத்துக்காக அர்த்தமற்ற கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சித்தாமூர் பகுதி கிராமங்களில் விஷச் சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே ஊரில் ஒரே நாளில் பலரது உயிர்கள் பறிபோய் உள்ளது.

விஷ சாராயத்தை வாங்கிக் குடித்தது சட்டவிரோதமாக இருந்தாலும் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து தவிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. மனித நேயத்தோடு துயரத்தில் பங்கேற்க வேண்டியது அவசியமாகி விட்டது.

அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கே அன்றைய தினமே நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார். அதோடு நிற்காமல் விசாரணையை முடுக்கி விட்டார்.

மெத்தனமாக செயல்பட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டு அதிரடி காட்டினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் விஷ சாராய சாவை மூலதனமாக்கி அரசியல் லாபம் அடையும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரஸ் பாடுகிறார்கள்.

விஷ சாராயம் குடித்து மரணங்கள் நிகழ்வது என்பது ஏதோ திமுக ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளதாக ஒப்பாரி வைப்பது சரியல்ல. இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நிகழவே இல்லையா?

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001ம் ஆண்டு பண்ருட்டியில் விஷசாராயம் குடித்து 52 பேர் பலியானார்கள். அதே ஆண்டில் காஞ்சிபுரம் அருகிலும் ரெட்ஹில்ஸ் அருகிலும் 30க்கும் மேற்பட்டோர் விஷசாராயத்துக்கு பலியானார்களே, 30க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்த பரிதாபமும் நடந்ததே. அப்போது எத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்தார்? எடப்பாடி பழனிசாமிக்கு இந்த வரலாறு தெரியாதா?

பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் விஷ சாராயத்துக்கு சமீபத்தில் 40 பேர் பலியாகினர். அப்போது என்ன அம்மாநில முதல்வர் ராஜினாமாவா செய்தார்? இந்த வரலாறு அண்ணாமலைக்குத் தெரியாதா?

அப்போதெல்லாம் வாயைத் திறக்காத எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் இப்போது அகலமாக வாயைத் திறப்பதேன்? இருவரும் சாவு வீடுகளில் அரசியல் லாபம் பார்க்க முனைகின்றனர் என்பதே உண்மை.

இதே எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் 13 பேரை குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றாரே, அப்போது அவர் ஏன் ராஜினாமா செய்ய வில்லை-? அவர் அப்போது ராஜினாமா செய்திருந்தால் இப்போது வாயைத் திறப்பதில் கொஞ்சமாவது அர்த்தம் இருந்திருக்கும்.

எந்த மாநிலத்திலாவது சட்டம் & ஒழுங்கு கெட்டால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது வாடிக்கை. தமிழ்நாடு அமைதியான மாநிலம் என உச்சநீதிமன்றமே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.

இனியும் அகில இந்தியாவிற்கும் முன்னோடியாகத் திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அற்பக் காரணங்களுக்காக குரல் எழுப்பினால் அது அர்த்தமற்றதாகவே இருக்கும்!

படிக்க வேண்டும்

spot_img