fbpx
Homeதலையங்கம்அதிபர் ஆட்சிக்கு வித்திடும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’!

அதிபர் ஆட்சிக்கு வித்திடும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த கமிட்டி தனது ஆலோசனையைத் தொடங்கி உள்ளது.

இதனிடையே, இந்த ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியா என்பது மிகப்பெரிய நாடு. இப்படியொரு பெரிய நாட்டில் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தும் போது சில நடைமுறை சிக்கல்கள் வரும். அதாவது, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் என்ன ஆகும்?

உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக் கொண்டால் 4 விதமான வாக்குப்பதிவுகள் நடைபெற வேண்டும். அதை தவிர, சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு இரண்டு வாக்குகள் என மொத்தம் 6 வாக்குப்பதிவுகள் போட வேண்டும்.

அப்படியென்றால் 6 வெவ்வேறு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க வேண்டும்.
அதற்கு அதிக அளவிலான இயந்திரங்கள் தேவைப்படும். ஆனால், நமது தேர்தல் ஆணையத்திடம் தற்போது 12 லட்சம் வாக்கு இயந்திரங்கள் தான் இருக்கின்றன.

ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த கிட்டத்தட்ட 25 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டும். வாக்காளர்களுக்கும் சிரமம். இப்படி எல்லா அம்சங்களை பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும். இது ஒருபுறமிருக்கட்டும்.

நாட்டில் 1967-ம் ஆண்டு வரை லோக்சபா தேர்தலுடனேயே அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 1968-க்குப் பின் சில மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டதால் பிந்தைய காலங்களில் ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாமல் போனது.

– 1983-ல் இந்திய தேர்தல் ஆணையமும் 1999-ல் சட்ட ஆணையமும் நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்தலாம் என பரிந்துரைத்தன.

ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு வெவ்வேறு கால கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இதனை மாற்றி மக்களவை, மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே தேர்தலாக நடத்துவது என்பதுதான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’-&ன் மைய அம்சம்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் ரூ60,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவு என்பது பெருமளவு குறையும் என்பது மற்றொரு கருத்து. –

ஆனால் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை செயல்படுத்துவதற்கு முன்னர், நாட்டின் அனைத்து சட்டசபைகளின் ஆயுட் காலம் குறித்து ஒரே மாதிரியான அரசியல் சாசன திருத்தம் முதலில் கொண்டுவர வேண்டும்.

ஒரு சட்டசபைக்கு தேர்தல் நடந்து அடுத்த ஒரே ஆண்டில் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால் மீதமிருக்கும் 4 ஆண்டுகளும் அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாட்சி நடக்க வாய்ப்பில்லை. இது அந்த மாநிலத்தின் வளர்ச்சியையே பாதிக்கும்.

மேலும் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் தேசிய பிரச்சனைகளுக்குதான் முக்கியத்துவம் கிடைக்கும்; மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது.

மக்களவை தேர்தலுடன் மாநில தேர்தல்கள் நடைபெறும் போது தேசிய கட்சிகள் அளவுக்கு மாநில கட்சிகளால் தேர்தல் செலவுகளை மேற்கொள்ளவும் முடியாது என்கிற அச்சமும் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவை, சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் போது இந்த பாதையானது நாட்டில் அதிபர் ஆட்சி முறை…- ஒற்றை ஆட்சி முறைக்கு கொண்டு போய் சேர்த்துவிடும் என்பது பெரும்பாலான கட்சிகளின் அச்சம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட இந்த அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி அமைப்புக்கே வேட்டு வைத்து விடும் என்றும் எச்சரித்து இருக்கிறார். பாரதத்தின் மீதான தாக்குதல் என ராகுல்காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கருத்தை உதாசீனப்படுத்தி விடமுடியாது!

படிக்க வேண்டும்

spot_img