fbpx
Homeதலையங்கம்மூத்த குடிமக்களை வஞ்சிப்பது நியாயமா?

மூத்த குடிமக்களை வஞ்சிப்பது நியாயமா?

ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணிக்க அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. புதிதாக சலுகை அளிக்காவிட்டாலும் காலங்காலமாக மூத்தக்குடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகையை பறித்துக் கொண்டுள்ளனர்.

இது ஒரு குரூர நடவடிக்கையாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
மூத்தகுடி மக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றக்குழு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதனைக் கூட ஏற்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. இதேபோலத் தான் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஒய்வூதியத்தை ரூ.1000ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றக்குழு பரிந்துரைத்தது.

இதனை ஏற்றுக் கொள்ளாமல் ஒன்றிய அரசு இழுத்தடிக்கிறது. நாடாளுமன்ற குழுக்களின் பரிந்துரைகளுக்கு கூட உரிய மரியாதை தரப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

மீண்டும் ரயில் கட்டணச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த 14.43 கோடி மூத்தகுடி மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருப்பதோடு, பலருக்கு மனஉளைச்சலையும் தந்து இருக்கிறது.

அதே வேளையில் ஒன்றிய அரசை இடித்துரைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாணியில் (திராவிட மாடல்) மூத்தகுடி மக்களுக்காக இன்னொரு அருமையானத் திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார். அது என்ன?

நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அறிவித்த தமிழக அரசு, தற்போது மூத்தக்குடி மக்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்றத் திட்டத்திற்கு சென்னையில் அடித்தளமிட்டிருக்கிறது, தமிழக அரசு.

இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
மூத்தகுடி மக்களுக்கு கட்டணச்சலுகையை ரத்து செய்ததால் ரயில்வேக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

வருவாய் ஈட்ட எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் மூத்த குடிமக்கள் பெற்று வந்த உரிமையில் கைவைப்பது எந்த விதத்தில் நியாயமோ, தெரியவில்லை.

மூத்த குடிமக்களுக்கு நியாயம் தான் வேண்டும். அநியாயம் வேண்டாம். ரத்து செய்த ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசு செவி மடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img