fbpx
Homeபிற செய்திகள்அசுத்தமாக இருந்த ஆவின் பாலகம்: சுத்தம் செய்த வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ

அசுத்தமாக இருந்த ஆவின் பாலகம்: சுத்தம் செய்த வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ

தருமபுரி நான்கு ரோடு அருகே அரசின் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. தருமபுரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆவினில் விற்கப்படும் பொருட்கள் வாங்கி செல்வதும் அங்கே அமைந்துள்ள பூங்காவில் அமர்ந்து பால் மற்றும் தேநீர் அருந்தி செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இரவு நேரத்தில் அவ்வழியே சென்ற போது ஆவின் கடைக்கு சென்று பால் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் ஆவின் பாலகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், பூங்காவை சுற்றியும் இருள் சூழ்ந்து இருப்பதை சரி செய்து மின்விளக்கு வசதி ஏற்படுத்த கேட்டுக்கொண்டார்.

மீண்டும் ஆவின் பாலகத்தை ஆய்வு செய்ய சென்றார். அப்பொழுது ஆவின் பாலகத்தின் முன்புறம் உள்ள தரையை அவரே தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தினார்.

ஆவின் பாலகத்தை தூய்மையாக பராமரித்தல், கழிவறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், ஆவின் பூங்காவிலுள்ள மேசைகள் தூய்மையாக வைத்தல், மின்விளக்கு சரி செய்தல் போன்ற பணிகளை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நிறைவேற்ற ஆவின் பொது மேலாளர் காமராஜிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க தலைவர் டி.ஆர். அன்பழகன், பாமக முன்னாள் சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர்கள் – சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img