எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 28 இடங்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 596 சதுர அடி கிலோ மீட்டர் பகுதிகள் ஏலத்தில் விடப்பட்டன.
இதில், கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னை அருகே உள்ள ஆழ்கடலில் ஒரு இடத்திலும் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையை சேர்ந்த வேதாந்தா நிறுவனமும் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த அனுமதியை பெற போட்டியிட்ட நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கே அந்த வாய்ப்பு சென்றுள்ளது.
இந்த 4 இடங்களிலும் 32 ஆயிரத்து 485 சதுர கிலோ மீட்டர் பகுதியில், இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கும் என மீனவர்களும், சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக் கும் என வல்லுநர்களும் குற்றம்சாட்டிவரும் நிலையில், அந்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க, ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலையும் மீனவர்களையும் பாதுகாக்க தமிழக அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. நாட்டின் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும் அதற்காக சுற்றுச்சூழலையும் கடல் வாழ் உயிரினங்களையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பணயம் வைக்கவேண்டுமா? என்ற கேள்விகளும் வலுவாகவே முன்வைக்கப்படுகின்றன.
எந்த விதத்திலும் மீன் வளமும் பாதிக்காது, சுற்றுச்சூழலும் பாதிக்காது என்பதை மத்திய அரசு உறுதி செய்து ஏதேனும அறிவிப்பு வெளியிட்டுள்ளதா? என்றால் அதுவுமில்லை. இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பது நியாயமல்ல.
எச்சரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் மீறி அனுமதி தந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இதுவரை வெளிப்படாத தமிழக அரசின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை தகுந்த வல்லுநர்கள் மூலம் பட்டியலிட்டு புள்ளிவிவரத்தோடு தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.!



