fbpx
Homeபிற செய்திகள்சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக மாணவ, மாணவிகள் கையாள வேண்டும்: சைபர் கிரைம் டிஎஸ்பி விஜயராகவன்...

சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக மாணவ, மாணவிகள் கையாள வேண்டும்: சைபர் கிரைம் டிஎஸ்பி விஜயராகவன் அறிவுரை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட அளவிலான யூத் ரெட் கிராஸ் தன்னார்வ தொண்டர்களுக்கான புத்தாக்க பயிற்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.


சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்)விஜயராகவன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவ மாணவியர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிக மிக கவனமாக கையாள வேண்டும் எனவும் தேவையின்றி தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்த்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


மேலும் சமீப காலமாக மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலமாக தவறான செய்திகள் அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர் எனவே மாணவ மாணவியர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள் மற்றும் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான கடமைகள் பற்றி எடுத்துரைத்தார். நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு போதைப் பொருள் தவிர்த்தல் குறித்த உறுதி மொழியினை வாசிக்க மாணவ மாணவியர் அதனை ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாநில முதலுதவி பயிற்சியாளர் பெஞ்சமின் கலந்து கொண்டு முதலுதவி அவசியம் குறித்து எடுத்துரைத்து செயல்முறை விளக்கமளித்தார். போதைப் பொருள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்க்கலாம் எனவும் போதை நபர்களை எவ்வாறு சிகிச்சையின் மூலம் விடுவிக்கலாம் என்பதையும் தன்னார்வ சிகிச்சையாளர் சதீஷ்குமார் எடுத்துரைத்தார்.


நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் அன்பு மலர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்ததானம் செய்பவரின் தகுதிகள் குறித்து விரிவாக பேசினார்.


நாமக்கல் மாவட்ட மனநல அலுவலர் மருத்துவர் இந்துமதி தற்காலத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் போனின் விளைவுகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும், எவ்வாறு அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்ட தலைவர் மாதையன் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள், நாமக்கல் மாவட்ட பல்வேறு கல்லூரியை சார்ந்த யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img