கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போர்டுகள் தொழில் நுட்பம் துவங்கப்பட்டது.
தற்போது பல்வேறு பள்ளி வகுப்பறைகளில், ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த நவீன தொழில்நுட்பம் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாடு முழுவதும் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பத்தை கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது..
முதல் கட்டமாக நாற்பது ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட்டு வகுப்பறைகளில் இதற்கான பயன்பாடு துவங்கியது. இதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின் தலைமையில் நடைபெற்ற இதற்கான விழாவை பள்ளியின் தலைமையாசிரியை மெர்சி மெட்டில்டா ஒருங்கிணைத்தார்.
இதில் தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் மறை திரு திமோத்தி ரவீந்தர் கலந்து கொண்டு ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாட்டை வகுப்பறைகளில் துவக்கி வைத்தார்.
இதே போல பள்ளியில் மின்சார உபயோகத்திற்கான புதிதாக நிறுவப்பட்ட சோலார் பேனல்களும் துவங்கப்பட்டன.. ஸ்மார்ட் போர்டுகள் துவங்கப்பட்டதன் நோக்கம் குறித்து பள்ளியின் நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்கும் திறன்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட் போர்டு பயன்பாட்டை வகுப்பறைகளில் துவங்கி உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பொருளாளர் அமிர்தம்,மற்றும் ஆயர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர்கள், சி.எஸ்.ஐ.கல்வி நிறுவனங்களின் பல்வேறு நிலை நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.