கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.
வருகின்ற 18 ஆம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும் அதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் கோ பூஜை விளக்கு பூஜை அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் இருபதாம் தேதி பொதுகூட்டம் பின்னர் மேட்டுப்பாளையம் நகர வீதிகள் வழியே விஜர்சன ஊர்வலம் சென்று பவானியாற்றில் சிலைகளை கரைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் 74 சிலைகளும், காரமடையில் 136 சிலைகளும், சிறுமுகையில் 52 சிலைகளும் என மொத்தம் 262 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது..
இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் வந்திருந்தார்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் சின்ன பள்ளி வாசல் உள்ள ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது செரீப் மற்றும் இஸ்லாமிய பெரியோர்களை சந்தித்து அவர்களது கருத்துக்ளை கேட்டறிந்தார்.
இதில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, மேட்டுப் பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம்,தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திலக் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.