fbpx
Homeதலையங்கம்நொய்யல் மணக்கும் காலம் விரைந்து மலரட்டும்!

நொய்யல் மணக்கும் காலம் விரைந்து மலரட்டும்!

தமிழ்நாட்டில் 55க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் நொய்யல் ஆறு, கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஏழு ஓடைகள் ஒன்று சேர்ந்து குஞ்சரான் முடி என பெயர் பெற்று பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. இதில்தான் கோவை குற்றாலம் அருவி உள்ளது.

மேலும் நொய்யல் ஆறு, சமவெளிக்கு இறங்கும் பகுதியில், தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய இருபது ஓடைகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது.

பின்னர் பேரூர், கோவை, சூலூர், திருப்பூர், கொடுமணல் ஆகிய நகரங்கள் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்றின் நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் விதமான நீர் மேலாண்மைத் திட்டம், அதாவது கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சோழர்கள் காலத்திலும், பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் வந்த ஆங்கிலேய காலனி அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் தற்போது மிதமிஞ்சிய அளவில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அண்மை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் சூழலியல் ஆர்வலர்கள், மனிதருக்கும், மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர்.
இந்த நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பைத் தடுத்து சீரமைக்க வேண்டும் என்பது கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11,000 ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறும் நொய்யல் ஆற்றின் விரிவாக்கம், சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால் சீரமைப்பு பணிகள் பெயரளவிற்கு மட்டுமே நடந்தது. முழுமையாக செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது நொய்யல் ஆறு 1,200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்து பணிகள் தொடங்காத நிலையில் திமுக தற்போது புதிதாக திட்டங்களில் சில மாற்றங்களை செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.

இதற்காக விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இம்முறை மத்திய அரசு 990 கோடியை வழங்கும், மீதமுள்ளவை தமிழ்நாடு அரசிடம் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நொய்யல் ஆற்றை மொத்தமாக மாற்றும் விதமாக அதை சீரமைக்கும் பணிகளை முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்திருப்பது கோவை மாவட்ட மக்களுக்கு இனிக்கும் செய்தியாகும். இந்த மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.

தொடங்கிய வேகத்தில் பணியை விரைவாக தொடங்க வேண்டும். றஇந்த திட்டம் முழுமையாக நிறைவேறும்போது, நொய்யல் ஆற்றை மாசுபடுத்தியதன் மூலம் குனிந்த கோவையின் தலை நிமிரும் என்பதில் ஐயமில்லை.

நொய்யல் மணக்கும் காலம் விரைந்து மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img