கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.624.11 கோடி மதிப்பீட்டில் 6,796 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
கோவை நகர்ப்புற வளர்ச்சி பகுதி 1531.53 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தப் பட்டு வரைவு நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (டிச.1) கோவை மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசியதாவது:
கோவை நகர்ப்புற வளர்ச்சிப் பகுதியை பொருளாதார மண்டலமாக கொண்டு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சமூக வசதிகளுடனும் கட்டுப் படுத்தப்பட்ட வளர்ச்சியினை மேற்கொண்டு இம்மாநகர மக்க ளுக்கு நிலையான வளர்ச்சியுடன் சிறந்த வாழ்விடத்தை உருவாக்குவதே இம்முழுமை திட்டத்தின் நோக்கமாகும்.
நிலத்தின் உகந்த பயன்பாடு, பரவலாக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சிக்கு ஆதரவாக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பசுமை பாதுகாத்தல், GIS தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோவையில் உள்ள பல்வேறு வகையான அபிவிருத்திகளை ஒன்றிணைத்து எதிர்கால வளர்ச்சியினை திட்டமிடுதல் மற்றும் புதிய நில வகைப்பாடு நடைமுறைப்படுத்துதல் உள் ளிட்டவை இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது கோவை நகர்ப்புற வளர்ச்சி பகுதி 1531.53 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டு வரைவு நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 67 ஊராட்சிகளுடன் கோவை நகர்ப்புற வளர்ச்சி பகுதி அமைகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதி களில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.624.11 கோடி மதிப்பீட்டில் 6,796 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இதில் 10 திட்டப்பணிகள் மூலம் ரூ.122.62 கோடி மதிப்பீட்டில் 2,261 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 4,535 குடியிருப்புகள் ரூ.501.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை விரைவாக முடித்திட தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா பேசினார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், இணை இயக்குநர் (மாவட்ட நகர் ஊரமைப்பு துறை) டி.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன், கண் காணிப்பு பொறியாளர் ரவி குமார், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
முன்னதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோவை மாநகராட்சி டவுன்ஹால், வெரைட்டி ஹால் ரோடு, பகுதியில் ரூ.45.05 கோடி மதிப்பீட்டில் 448 மறுகட்டுமான குடியிருப்புகள், கட்டுமானப் பணியினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் வீதியில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 85 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும், செல்வபுரம் ஐயுடிபி காலனியில் ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.